தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது அவர்களைக் கண்டதும் நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் விஜய், ரசிகர்களை நோக்கித் திரும்பித் திரும்பிப் பார்த்து கைகளால் ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்து, மகிழ்ச்சியுடன் கையசைத்துத் தனது லண்டன் பயணத்தைத் தொடங்கினார்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் இந்த வார இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சனிக்கிழமை நடைபெற உள்ள ‘சில்வர்ஸ்டோன் ரவுண்ட்’ பந்தயத்தைப் கொடி அசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். அதிலும் குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரமும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இப்போட்டியில் களம் இறங்குகின்றனர்.
அவர்களை நேரில் கண்டு உற்சாகப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் சர்வதேச விளையாட்டு மேடையில் ஒரே புள்ளியில் இணைய உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, உலகம் முழுவதும் உள்ள அவர்களது ரசிகர்களிடையேயும், விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
