பைனலுக்கு முன்னேறியது இந்தியா: வெளியேறியது வங்கதேசம்

துபாய்: ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் 40 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) 10வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

ஷபாலி அபாரம்: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (2) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ஷபாலி வர்மா, சுல்தானா வீசிய 4வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். பிரதிகா ராவல் (20) ஓரளவு கைகொடுத்தார். பருமா வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய ஷபாலி, சர்வதேச ‘டி-20’ அரங்கில் தனது 20வது அரைசதத்தை பதிவு செய்தார். ஷபாலி, 40 பந்தில் 64 ரன் (3X6, 7X4) எடுத்து ஆட்டமிழந்தார்.

பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி கைகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரிச்சா கோஷ் (21) அவுட்டானார். பஹிமா, நகிதா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார் ஹர்மன்பிரீத். மருபா வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த தீப்தி சர்மா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவரில் 149/5 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் (24) அவுட்டாகாமல் இருந்தார்.

தீப்தி அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 20 ஓவரில், 109/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷோர்னா (22), திலாரா (21), கேப்டன் நிகார் சுல்தானா (19) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, நந்தினி 2 விக்கெட் கைப்பற்றினர்.

Source link