மாஜி விஜயபாஸ்கர் மீது புகார் : அ.தி.மு.க. வேட்பாளரிடம் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட தன்னிடம் வைப்புத் தொகையாக ரூ.4.50 கோடி பணத்தை அதிமுக மா.செ.வாக இருந்த மாஜி விஜயபாஸ்கர் வாங்கிக் கொண்டு ரூ.50 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தவர் மீதமுள்ள ரூ.4 கோடி மற்றும் எனது தந்தை பெயரில் உள்ள வீட்டை அடமானம் எழுதி வாங்கிக் கொண்டு மேலும் என்னிடம் கையெழுத்திட்ட காசோலையும் வாங்கி திருப்பித் தரவில்லை. ஆகவே மாஜி விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை என்ற நிலையில் ஆலங்குடி அதிமுக  வேட்பாளர் தன.விமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் ஆஜரான போலிசார் புகார் குறித்து முதல்கட்ட விசாரணைக்குச் சம்மன் அனுப்பி உள்ளதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். விசாரணை அறிக்கையை அடுத்த வாய்தாவில் போலிசார் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தவெக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ள மாஜி அதிமுக மா செ விஜயபாஸ்கர் மீது மோசடி புகார் கொடுத்துள்ள தன.விமல், அவரது தந்தை தனசேகரன், பணத்தைக் கொடுக்கும் போது அருகில் இருந்த பழனிவேல் உள்பட 4 பேருக்கு போலிசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருந்தனர். இன்று 10 ந் தேதி வியாழக்கிழமை விசாரணை அதிகாரியான புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தாவிடம் 4 பேரும் ஆஜராகி உள்ளனர். இவர்களிடம் பணம் கொடுத்தது பற்றி டிஎஸ்பி விசாரணை செய்து அவர்களிடம் இருந்த ஆதாரங்களையும் பெற்று முதல்கட்ட விசாரணையை முடித்துள்ளார். 

அடுத்ததாக தவெக நிர்வாகி விஜயபாஸ்கர் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் சோத்துப்பாளை முருகேசன் உள்பட புகாரில் காட்டப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை செய்ய போலிசார் தயாராகி உள்ளனர். இந்த விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜயபாஸ்கர் நடத்தும் கிரஷர் மற்றும் குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதா? முறைகேடு நடந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அந்த தொகை எவ்வளவு? தொகை வசூல்  செய்யப்பட்டுள்ளதா என்று பல கேள்விகளுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன.விமல் தரப்பினர் கேள்விகளும் கேட்டுள்ளனர். இதனால் கனிம வளத்துறை அதிகாரிகளும் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

Source link