நம் நாட்டின் அணு ஆயுத கையிருப்பு  190!: அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மதிப்பீடு

புதுடில்லி: நம் ராணுவத்திடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அதனை நவீனப்படுத்தும் பணிகளிலும் நம் நாடு ஈடுபட்டு வருவதாக அந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான் என நம் நாட்டுக்கு இரு நாடுகளும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. எதிரிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் நம் ராணுவத்தின் பலத்தை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அதிநவீன ராணுவ தளவாடங்கள், டிஜிட்டல் போர் கருவிகள், ராணுவம் சார்ந்த தொழில்நுட்பங்களை அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து நாம் வாங்கி வருகிறோம்.

இந்நிலையில், அமெ ரிக்க விஞ்ஞானிகள் கூட்ட மைப்பு, நம் நாடு அணு ஆயுதங்களை பெருக்கி வருவதாக மதிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுஉள்ளது.

பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள், பொது தகவல்களை அடிப்படையாக கொண்டு நம் நாட்டின் அணு ஆயுதங்கள் குறித்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.


ஒன்பது அமைப்பு

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அணு ஆயுதங்களை ஏவக்கூடிய படை அமைப்பு மற்றும் திறன் தொடர்பான பொது தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் தற்போது 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்.

அதில் 178 அணு குண்டுகள், ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் மத்திய ஆயுத சேமிப்பு களஞ்சியத்தின் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கலாம்.

தற்போது, இந்தியாவிடம் அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் படைத்த ஒன்பது அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன.

இதில் வான்வழியாக தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இரு அமைப்புகள், தரை வழியாக தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக ஆறு ஏவுகணை அமைப்புகளும் அடங்கும். தவிர, மேலும் இரு புதிய அமைப்புகள் வருங்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

தற்போது செயல்பாட்டில் உள்ள ஏவுதிறன் அமைப்புகள் மூலம் 160க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்க முடியும்.

இது தவிர, புதிதாக படையில் இணைக்கப்படும் ஏவுகணைகளுக்காக, அணு ஆயுதங்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கடல் வழியாக வரும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான திறனும் இந்தியாவிடம் விரிவடைந்து வருகிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுஆயுத நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்., அரிதமன் கடந்த ஏப்ரலில், கடற்படையில் சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியாவின் பலத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

நான்காவது நீர்மூழ்கி கப்பல் 2027ல் படையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் புதிய ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் செயல்பாட்டுக்கு வரும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பும் அபரிமிதமாக அதிகரிக்கலாம்.

அணு ஆற்றல் மூலப்பொருட்களுக்கான சர்வதேச குழுவின் கணக்கீட்டின்படி, 2026 தொடக்கத்தில் இந்தியா 730 கிலோ புளூடோனியம் உற்பத்தி செய்து இருக்கிறது. இதில், 170 கிலோ வரை கூடுதலாகவோ, குறைவா கவோ இருக்கலாம்.

ஒரு அணுகுண்டு தயாரிக்க சராசரியாக நான்கு கிலோ புளூடோனியம் தேவைப்படும். அந்த கோட்பாட்டின் அடிப்படையில், இந்தியாவிடம் உள்ள புளூடோனியம் மூலம் 140 முதல் 225 அணுகுண்டுகள் வரை தயாரிக்க முடியும்.

இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு, பாகிஸ்தானை விட அதிகம் என்றாலும், சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவை விட கணிசமான அளவுக்கு குறைவாகவே இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒன்பது அணு ஆயுத நாடுகளிடம் 12,187 அணுகுண்டுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதில் 9,754 அணுகுண்டுகள் ராணுவ கையிருப்பில் இருக்கின்றன.


தடுப்பு திறன்

இந்தியாவின் அணு ஆயுத கொள்கை, பாகிஸ்தானை மையப்படுத்தியே அமைந்து இருக்கிறது. அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டமும் அதை நோக்கியே வடிவமைக்கப்படுகிறது.

எனினும், நீண்ட துார ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் திறனை பெருக்கி வருவதன் மூலம், சீனாவையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, இந்தியாவின் அணு ஆயுத தடுப்பு திறன் வலுவடைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்ட 190 அணு ஆயுதங்கள் என்ற மதிப்பீடு நம் அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் அல்ல. துல்லியமான அணு ஆயுத கையிருப்பு தெரியவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டாப் அணு ஆயுத நாடுகள் நாடு அணு ஆயதங்களின் எண்ணிக்கை இந்தியா 190 பாகிஸ்தான் 170 சீனா 620 அமெரிக்கா 3,700 ரஷ்யா 4,400

Source link