சென்னை: ‘தெற்கு ரயில்வேயில் 5,068 கி.மீ., துாரமுள்ள ஒட்டுமொத்த அகல ரயில் பாதையும், 100 சதவீதம் முழுமையாக மின்மயமாக்கப்பட்டு, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில், கடந்த ஆண்டு நிலவரப்படி, மொத்த வலையமைப்பில், பட்டுக்கோட்டை — காரைக்குடி இடையிலான ரயில் பாதை இறுதி பணிகள் முடிவதற்கு, சற்று முன் வரை, 98.7 சதவீதம் மின்மயமாக்கல் எட்டப்பட்டிருந்தது. தற்போது எஞ்சியிருந்த 71 கி.மீ., துாரமும் வெற்றிகரமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை — காரைக்குடி பாதையை, தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ், நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார்.
தற்போது, 5,068 கி.மீ., துார ரயில்பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளதால், இனி ரயில் இன்ஜின் மாற்ற வேண்டிய அவசியமின்றி, மண்டலம் முழுதும் தடையற்ற மின்சார ரயில் சேவைகளை வழங்க முடியும்.
ரயில்களை விரைவாக இயக்க முடிவதுடன், செயல்பாட்டுத் திறன் மற்றும் இன்ஜின்களின் பயன்பாடு கணிசமாக மேம்படும்.
டீசல் பயன்பாட்டை குறைப்பதன் வாயிலாக, பசுமையான, துாய்மையான மற்றும் நிலையான, ரயில் போக்குவரத்தை நோக்கி, தெற்கு ரயில்வே முன்னேறுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
