பரந்தூரில் அமையவிருந்த விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் ரூ.175 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரமங்கலத்தில் அமையவுள்ள இப்பூங்காவுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். எ
சென்னைக்கு 2வது பெரிய விமான நிலையம்
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர்மற்றும் ஏகனாபுரத்தில் சென்னைக்கான 2-வது புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து திட்டமிடப்பட்டது. எனினும், இந்தத் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் தரப்பில் தீவிர எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.ஆனாலும், திமுக விமான நிலையத்தை கட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.
டெல்லியில் ரெடி ஆகும் புது பிளான்? 3 வது அணியில் திமுக?
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் முற்றிலும் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு விவசாய நிலங்கள் மீண்டும் பாதுகாக்கப்பட்ட நிலையில், அவ்விடம் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்த சூழலில், அதற்குத் தவெக அரசு தற்போது புதிய தீர்வை முன்னெடுத்துள்ளது.
ரூ.175 கோடி செலவில் புதிய ‘செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்கா’
பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் (SIPCOT) மூலம் பிரம்மாண்ட தொழிற்பூங்காவை அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகளவில் அதிகரித்து வரும் மின்னணு சாதனங்களின் தேவையை எதிர்கொள்ளும் வகையில், செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தித் துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக ரூ.175 கோடி செலவில் புதிய ‘செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்கா’அமைக்கப்பட உள்ளது.
இத்தொழிற்பூங்காவிற்கான நில ஆர்ஜிதம் குறித்த முக்கிய சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார். அதில், தொழில் பயன்பாட்டிற்காக முதற்கட்டமாக 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கையகப்படுத்தப்படவுள்ள இந்நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வேம்பு மற்றும் தென்னை மரங்கள் மட்டுமே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரைபடங்கள் மற்றும் திட்ட விவரங்கள்
நில எடுப்பு குறித்த முழுமையான வரைபடங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் அலுவலக வேலை நாட்களில் இவற்றை நேரில் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மதுரமங்கலத்தில் மொத்தம் 166.31.50 ஹெக்டேர் (410.80 ஏக்கர்) பட்டா நிலங்களைக் கையகப்படுத்தவும், 4.67.50 ஹெக்டேர் (11.55 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலங்களின் உரிமையை மாற்றம் செய்யவும் நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன.
5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
முதலமைச்சர் விஜய்யின் சட்டசபை அறிவிப்பைத் தொடர்ந்து முடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், செமிகண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலைகளுடன் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்களும் இடம்பெறவுள்ளன.
இத்தொழிற்பூங்கா முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது சுமார் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும், மின்னணு உற்பத்திச் சூழலையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
