BRICS Summit,இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பிரிக்ஸ் மாநாடு: புதிய நம்பிக்கையில் இந்தியா – brics summit benefit indian economy in a big way check here how

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு பொருளாதார ரீதியாகவும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, புதிய சந்தைகள், அந்நிய முதலீடு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவுக்குப் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை பிரிக்ஸ் அமைப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

புது தில்லியில் நடைபெறவுள்ள 18ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் நிச்சயமற்ற சூழலில் பிரிக்ஸ் நாடுகளின் இந்த சந்திப்பு இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா பெறக்கூடிய பொருளாதார ரீதியிலான நன்மைகள் குறித்து பொருளாதார நிபுணர்களான சுனில் ஷா மற்றும் பங்கஜ் ஜெய்ஸ்வால் ஆகியோர் விரிவான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, வர்த்தகம், அந்நிய முதலீடு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுக்குப் பல முக்கிய நன்மைகளை இந்த பிரிக்ஸ் உச்சிமாநாடு வழங்கும் என்கின்றானர். அப்படிப்பட்ட முக்கியமான் நன்மைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

புதிய சந்தைகளை ஆராய்தல்!

பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் இந்தியாவுக்குப் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். அமெரிக்காவின் வரிக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரிக்ஸ் மூலம் நேரடி நிவாரணம் கிடைப்பது சாத்தியமில்லை என்றாலும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்திருப்பதை இந்தியா கணிசமாகக் குறைக்க முடியும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம்!

உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுக்கும் வகையில், உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வது ஊக்குவிக்கப்படும். ரஷ்யாவுடனான உள்ளூர் நாணய வர்த்தகத்தை அதிகரிப்பது பணப் பரிவர்த்தனைச் சிக்கல்களைக் குறைப்பதோடு, கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியையும் எளிதாக்கும். அதே வேளையில், CBDC-கள் (மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள்) மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தவும் எளிதாக்கவும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

வளைகுடா நாடுகளிலிருந்து முதலீடு!

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற புதிய உறுப்பு நாடுகளின் வருகையானது இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பை அளிக்கிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளில் கணிசமான மூலதன முதலீடுகளைச் செய்ய வளைகுடா நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை (ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை) பிரிக்ஸ் குழுமம் உள்ளடக்கியுள்ளது. இந்நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு மூலோபாய உறவுகள் நம் நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்புக்கென தனி நாணயம் இருக்குமா?

பிரிக்ஸ் அமைப்பு தனக்கென ஒரு பொதுவான நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு, உறுப்பு நாடுகள் தங்கள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதிலும், டிஜிட்டல் கட்டண முறைகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

Source link