சென்னை: கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வி.எஸ்.பாபு. கடந்த ஒரு மாத காலமாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த அவருக்கு, கடந்த சில நாட்களாக மார்பு சளி பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டில் ஓய்வில் இருந்த வி.எஸ்.பாபுவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு எம்எல்ஏ தீவிர சிகிச்சைப் பிரிவில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் நேரடி கண்காணிப்பில் உள்ளார்.
அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நலம் விசாரித்தார்
நிதி அமைச்சர் மரியவில்சன் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “வி.எஸ்.பாபு சளி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு பாபுவிடம் நலம் விசாரித்தனர்” என்றார்.
