புதுடெல்லி: டெல்லி பாரத் மண்டபத்தில் சர்வதேச தொழில் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் ரஷ்ய அரசு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (யுஏசி) உட்பட 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு, இந்திய நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
கண்காட்சியின் முதல் நாளான நேற்று ரஷ்யாவின் யுஏசி நிறுவனத்துக்கும் 3 இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி யுஏசி நிறுவன தயாரிப்பான ஐஎல்-114-300 ரகத்தைச் சேர்ந்த 105 பயணிகள் விமானங்கள் இந்திய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பினாக்கிள் ஏர் நிறுவனத்துக்கு 50, ஹரியானாவின் குர்கான் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்லீக் நிறுவனத்துக்கு 35, கேரளாவின் ஏர் கேரளா நிறுவனத்துக்கு 20 விமானங்கள் விநியோகம் செய்யப்படும் என்று யுஏசி நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஐஎல்-114-300 ரக விமானம், 68 இருக்கைகள் கொண்டதாகும்.
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,000 கி.மீ. தொலைவு வரை தரையிறங்காமல் பறக்கும். சுமார் 25,000 அடி உயரத்தில் மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும். யுஏசி தலைமைச் செயல் அதிகாரி வாடிம் படேகா கூறும்போது “இந்தியாவிலேயே ஐஎல்-114-300 ரக விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.
