சென்னை: சென்னையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், நேற்று இரவில் மட்டும் 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த மோதலில், சினிமா துணை நடிகர் பிரதீப் ராஜ்,30, என்பவர் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக கொல்லப்பட்டார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த மறுநாளே, அவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன்,45, என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த நடந்த இந்தக் குற்றம் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேரதிரிச்சியை ஏற்படுத்தின. எனவே, சென்னையில் குற்றச்செயல்களை குறைக்க முடிவு செய்த போலீசார், ‘ஆப்பரேஷன் டிரைவ்’ என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில், பிரபல ரவுடிகள் மற்றும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்தனர்.
குறிப்பாக, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த ரவுடிகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர். நேற்று ஒரே இரவில் மட்டும், குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
