இந்திய அணிக்காக கடைசியாக 2025-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பார்த்தது ஷமி பவுலிங்கை. டெஸ்ட் போட்டி கடைசியாக ஆடியது 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.
இவரை அணியில் இருந்து ஒதுக்கி வைக்க இதுவரை முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கிரிக்கெட் அல்லாத காரணங்களே பிரதானமாக இருக்கலாம் என்று நம்மை ஐயம் கொள்ளச் செய்கிறது அணித் தேர்வுக்குழு, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன்கள் ஆகியோரது கள்ள மவுனம்.
சென்னை சேப்பாக்கத்தில் தெற்கு மண்டலத்தை துலீப் கோப்பை இறுதியில் வீழ்த்திய கிழக்கு மண்டல வெற்றியில் பெரிய பங்களிப்புச் செய்த பிறகே ஷமி, “எது வரினும் உத்வேகத்துடன் இருப்பது முக்கியம்” என்று சுய அகத்தூண்டுதல் முறைக்குச் சென்று விட்டார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் சென்னையின் கடும் வெயிலில் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்திய முகமது ஷமி, புதிய பந்தில் வழக்கமான ஸ்விங்கையும், பழைய பந்தில் தனது பிரத்யேகக் கலையான ரிவர்ஸ் ஸ்விங்கையும் சிறப்பாகப் பயன்படுத்தி அசத்தினார்.
ஷமியும் முகேஷ் குமாரும் 5 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள தெற்கு மண்டல அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் கிழக்கு மண்டல அணிக்கு முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய முன்னிலை கிடைத்தது. அந்த முன்னிலையே கிழக்கு மண்டலம் பட்டத்தை வெல்ல போதுமானதாக அமைந்தது.
வெற்றிக்குப் பிறகு ஷமி கூறும்போது, “இந்த மைதானத்திலிருந்தோ, நீங்கள் கால் பதிக்கும் எந்த மைதானத்திலிருந்தோ நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் விளையாடும்போது உங்களுக்குள் சுய உந்துதல் இல்லையென்றால், உங்கள் அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. நீங்கள் எந்த நிலையில் விளையாடினாலும், உங்கள் பார்வை எப்போதும் அதற்கு அடுத்த நிலையை நோக்கியே இருக்க வேண்டும்.
நான் எப்போதும் ஒன்றைச் சொல்வேன். நீங்கள் அணியின் சின்னத்துக்காக விளையாட வேண்டும். உங்கள் மார்பில் அந்த அணியின் சின்னத்தை அணிந்துவிட்டால், நீங்கள் எந்தத் தரத்தில் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அந்தச் சின்னத்துக்காக விளையாடும்போது, உங்களுடைய வெற்றி வேட்கை இயல்பாகவே வெளிப்படும். அந்தப் பெருமையுடன் விளையாடும்போது, போராட வேண்டும் என்ற மனநிலை மேலும் அதிகரிக்கும்.
என்னுடைய மனநிலை மிகவும் எளிமையானது. எந்த நிலையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தி, அணிக்கான என்னுடைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
நான் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறேன்; தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் வழக்கமான ஸ்விங்கை அதிகமாக எதிர்பார்க்க முடியாது. பந்தின் பவுன்ஸும் மிகவும் குறைவாக இருந்தது. எனது லைன் மற்றும் லெந்த் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அதிலிருந்துதான் விக்கெட்டுகளை உருவாக்க முயற்சிப்பேன்.
உண்மையாகச் சொல்வதானால், இப்படிப்பட்ட கடுமையான வெப்பத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், பிறகு எதற்காக இருக்கிறோம்?” இவ்வாறு கூறினார் முகமது ஷமி.
