புதுடெல்லி: டெல்லியில் செப்டம்பர் 12, 13-ல் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வங்கதேச பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு வரவில்லை.
பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராகவே அவருக்கு அழைப்பு வந்துள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஹுமாயூன் கபீர் கூறியுள்ளார். இதனால், பிரதமர் தாரிக் ரஹ்மான் இம்மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வேறொரு அரசு பிரதிநிதி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நமது பிரதமருக்கு நேரடி அழைப்பில்லை. மேலும், அவரது முதல் இந்தியப் பயணம் ஒரு பன்னாட்டு மாநாடாக இருக்க முடியாது. தகுந்த சூழல் அமையும் போது இருதரப்புப் பயணம் மேற்கொள்ளப்படும்” என்று கபீர் கூறினார்.
கடந்த 2024 ஆகஸ்டில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளித்ததால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவி வருகிறது. இருப்பினும், பிம்ஸ்டெக் தலைவராக பிரிக்ஸ் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்துக்கு ரஹ்மானுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
