புராணக் கதைகளின் படி, முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளை ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினமாக நாம் கொண்டாடுகிறோம்.இந்த நாளில் விநாயகரை மனதார வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சியும், வெற்றியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான விநாயகர் சிலையை எப்போதும் வாங்க வேண்டும், எந்த நேரத்தில் எப்படி வழிபட வேண்டும், விாநயகர் சிலையை கரைப்பதற்கான முறை என்ன, விநாயகருக்கு என்ன படைத்து வழிபடலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். விநாயகர் வழிபாட்டின் மகத்துவத்தை குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பது சிறப்பானதாகும்.
விநாயகர் சதுர்த்தி :
எந்த வழிபாடாக இருந்தாலும் முதல் பூஜையை பெறும் அற்புத தெய்வம் விநாயகப் பெருமான். யார் எந்த முறையிலும் வழிபட்டாலும் அவர்களின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு, அவர்களின் செயல்கள் எந்த விதமான தடை இல்லாமல் வெற்றி அடைவதற்கு அருளை வழங்கும் தெய்வம் விநாயகர். சாணம், மஞ்சள், சந்தனம், களி மண் என எதில் பிடித்து வைத்து வழிபட்டாலும், அதிலும் எழுந்தருளி, நமக்கு அருள் செய்யும் தெய்வம் விநாயகர். அவரது அவதார தினமாக ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி கருதப்படுகிறது. இதையே ஆண்டுதோறும் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடுகிறோம். 2026ம் ஆண்டில் செப்டம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகிறது. இந்த ஆண்டு எந்த நாளில் விநாயகர் சிலையை வாங்க வேண்டும், எந்த நேரத்தில் வழிபட வேண்டும், விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும், எந்த நாளில் எந்த நேரத்தில் கரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தி 2026 வழிபாட்டு நேரம் :
விநாயகர் சதுர்த்தி 2026 தேதி – செப்டம்பர் 14சதுர்த்தி திதி துவக்கம் – செப்டம்பர் 14 காலை 08.41 சதுர்த்தி திதி நிறைவு – செப்டம்பர் 15 காலை 09.22
விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம் :
செப்டம்பர் 13 – பகல் 03.10 முதல் மாலை 04.20 வரை
அல்லது மாலை 06.00 மணிக்கு பிறகுசெப்டம்பர் 14 – காலை 09.10 முதல் 10.20 வரை
கண்டிப்பாக புது விநாயகர் சிலை வாங்க வேண்டுமா?
ஒவ்வொரு வருடமும் புதிதாக விநாயகர் சிலை வாங்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த நாளை நம்பி, பல தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக வருடந்தோறும் புதிய விநாயகர் சிலை வாங்குவது தவறு கிடையாது. வெளிநாடுகளில் இருக்கிறோம் புதிதாக விநாயகர் சிலை வாங்க முடியாது என்பவர்கள் ஏற்கனவே இருக்கும் விநாயகர் சிலை அல்லது படத்தை வைத்து வழிபடலாம். ஆனால் புதிய சிலை வாங்குவதற்கு வழி இருக்கிறது என்பவர்கள் வாங்கி வழிபடலாம். களிமண் என்பது பஞ்சபூத தத்துவத்தை உள்ளிடக்கியது என்பதால் இந்த விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு, பிறகு தண்ணீரில் கரைப்பதால் நம்முடைய வாழ்வில் இருக்கும் தீமைகள், கர்மவினைகளும் கரைந்து, புதிய துவக்கம் விநாயகர் அருளால் ஏற்படும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை :
1. விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, விநாயகரை வீட்டிற்கு அழைக்க தயாராக வேண்டும்.
2. விநாயகர் சிலையை பொதுவாக குறைந்தபட்சம் 3 நாட்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வருவதால், முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று வாங்கினால் மூன்றாவது நாள் செவ்வாய்கிழமை வருகிறது. அன்றைய தினம் விநாயகரை நீரில் கரைக்கக் கூடாது. அதனால் 5ம் நாளான வியாழக்கிழமை வரை வைத்திருக்க வேண்டும்.
3. கொடுக்கப்பட்டுள்ள மூன்று நேரத்தில் எந்த நேரத்திலும் விநாயகர் வழிபாடு செய்யலாம். பகல் நேரத்தில் இலை போட்டு படையல் போடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் நேரத்தில் வழிபடலாம்.
4. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை சந்திரன் உதயமான பிறகு மாலை நேரத்தில் செய்வது தான் சிறப்பு. பெரும்பாலானவர்கள் மாலை நேரத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிவை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
5. விநாயகருக்கு அருகம்புல், எருக்கம் பூ சாற்றி, மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
6. என்ன முடிகிறதோ அதை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். நிறைய பலகாரங்கள், பழங்கள் படைக்க முடியும் என்றால் படைக்கலாம். எளிமையாக அவல், பொரி மட்டும் தான் படைக்க முடியும் என்றாலும் படைக்கலாம். அதுவும் முடியாது என்பவர்கள் ஒரு டம்ளர் பால் காய்ச்சி, அதில் தேன் அல்லது சர்க்கைர, ஒரு வாழைப்பழம் வைத்தும் வழிபடலாம்.
7. விநாயகரை மனதார வேண்டி விநாயகர் அகவல், விநாயகருக்குரிய திருப்புகழ் ஆகியவற்றை படிக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரம்:
செப்டம்பர் 14 காலை 09.10 முதல் 10.20 வரை பகல் 01.00 முதல் 02.00 வரை மாலை 06.00 முதல் 08.00 வரை
விநாயகர் சிலை கரைக்கும் நேரம் :
செப்டம்பர் 13 (ஞாயிறு) வாங்கினால் – செப்டம்பர் 17 (வியாழன்) காலை 08.00 முதல் 09.00 வரைஅல்லது காலை 10.45 முதல் பகல் 01.00 வரைசெப்டம்பர் 14 (திங்கள்) வாங்கினால் – செப்டம்பர் 16 (புதன்) காலை 09.00 முதல் 10.20 வரை
விநாயகர் சிலை கரைக்கும் முறை :
விநாயகர் சிலையை நீர் நிலைகளை கரைக்க வசதி இருப்பவர்கள் தங்கள் கைகளால் சென்று கரைக்கலாம். முடியாதவர்கள் உங்கள் பகுதியில் பெரிய சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இடத்தில் நீங்கள் வழிபட்ட சிறிய விநாயகரையும் கொண்டு சென்று வைத்து விட்டால் அவர்கள் எடுத்துச் சென்று அதை கடலிலோ அல்லது ஆற்றிலோ கரைத்து விடுவார்கள். அதற்கும் வழி இல்லாதவர்கள் வீட்டிலேயே ஒரு வாலியின் தண்ணீர் வைத்து, அதற்குள் விநாயகர் சிலையை வைத்து கரைத்து விடலாம். கரைந்த மண் மற்றும் தண்ணீரை ஒரு தொட்டியில் வைத்து, புதிய செடிகள் நட்டு வைக்க பயன்படுத்தலாம்.
