“கனவு நனவாகிறது” – கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி!

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540வது படமாகும். இவரது இசையில் வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல்கள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் பின்னணி இசை நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை படம் வெளியாவதற்கு முன்பு நேரடியாக இசைக்கப்பட்டதும் அதை ஒரு ஆல்பமாக வெளியிடப்பட்டதும், இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

இந்த நிலையில் இப்படம் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இன்று மாலை ப்ரீமியர் செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் கனடா சென்றுள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கார்த்தி… சுப்பு… மற்றும் நான். டோரதி-யின் பயணம் இன்று தொடங்குகிறது. புகழ்பெற்ற ‘டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில்’ இன்று மாலை 5:30 மணிக்கு உலகளவில்முதல் முறையாக ப்ரீமியராகிறது. கனவு நனவாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் கார்த்தி மற்றும் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link