இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 12, 13) நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை மாறும்.
அப்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டித்தான், இந்த மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
உலக தலைவர்கள்
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இன்று டெல்லி வந்துவிட்டார் ரஷ்ய அதிபர் புதின். நாளை ஏழு ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவிற்கு வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

மேலும், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
தீம்
இந்தியாவில் நடக்கும் இந்தப் பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்தியா கொடுத்துள்ள தீம் – ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’.
மோடி பதிவு
பிரிக்ஸ் மாநாடு குறித்து இந்தியப் பிரதமர் மோடி, “வரவிருக்கும் நாள்களில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் இந்தியாவிற்கு வர உள்ளார்கள்.
உலக நன்மையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
சான்றோர்களுடனேயே பழக வேண்டும். சான்றோர்களுடனேயே கூடி வாழ வேண்டும்.
சான்றோர்களுடனேயே உரையாடல்களையும் நட்பையும் பேண வேண்டும். தீயோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
மோடி உடன் சந்திப்புகள்
இன்று புதினும், மசூத் பெஜெஷ்கியானும் மோடியைத் தனித்தனியாகச் சந்திக்க உள்ளனர். இப்போது உலக நாடுகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் இரண்டு – ஒன்று ஈரான் போர், இன்னொன்று, ரஷ்ய போர். இது குறித்து முக்கியமாக மோடி உடனான சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி ஜின்பிங்கும் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இன்னும் பல சந்திப்புகள் நடக்க உள்ளன.
இப்போது பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லி தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது.
