"புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை; ஆனால்…" – எடப்பாடி பழனிசாமி

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.

முதல்வர் விஜய்

இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்னைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்குப் பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link