தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடமை அரசுக்கு இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதிட்டதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடமை அரசுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநில அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னதாக, துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான மூத்த அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையைக் கைவிடும் முந்தைய தி.மு.க அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய தற்போதைய அரசு மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில் குமார் சி. சரத்கர் ஆகிய உயர்மட்ட அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்போதைய எஸ்.பி மகேந்திரன் விஷயத்தில் விசாரணை அதிகாரி மீண்டும் அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
விசாரணையின் போது வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், ஆணையத்தின் பரிந்துரையின்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுவிட்டதாகவும், பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ரூ.25 லட்சத்தை அரசு வழங்கப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த அரசுக்கு எந்த சட்டப்பூர்வ நிபந்தனையும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசின் மனசாட்சி என்னவென்று கேள்வி எழுப்பினார். மேலும், சி.பி.ஐ விசாரணையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலை மீது மட்டுமே சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை குறிப்பிட்டு, இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யவும், நிலுவையில் உள்ள நிவாரணத் தொகையை வழங்கக் கோரியும் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்டோர் தொடர்ந்த இந்த மனு தொடர்பாக, தொடர்புடைய வழக்கு ஒன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை உயர்நீதிமன்றக் கிளை ஒத்திவைத்தது.
