“பட்டிமன்றங்களை அறிவுத் தளங்களாக மாற்றியவர்” – சாலமன் பாப்பையாவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

சென்னை: ‘பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது’ என தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா மறைவு: மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். மதுரை ஞானஒளிவு புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக பேசுவதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார்.

சமூகத்திலும, ஒவ்வொருவரது வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கடல் கடந்தும் தமிழ் மொழியை வளர்த்தவர்.

பேச்சாற்றலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையா, சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

நெஞ்சு வலி காரணத்தால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Source link