இந்தியாவின் லடாக், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஒரே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு 12:27 மணியளவில் இந்தியாவிலுள்ள லடாக்கின் லே பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நள்ளிரவில் திடீரென வீடுகள் அதிர்ந்ததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
லடாக்கைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் அதிகாலை 1:20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவானதுடன், பூமிக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 3.1 ரிக்டர் அளவு என்பது லேசான நிலநடுக்கப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டாலும், நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் பகுதியிலும் அதிகாலையில் நில அதிர்வு பதிவானது. ரிக்டர் அளவுகோலில் இது 3.0 ஆகப் பதிவாகியிருந்தது.
திபெத் – ஆப்கானிஸ்தான்
இன்று அதிகாலை 4:02 மணியளவில் திபெத் பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
திபெத் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 18 நிமிடங்களில், அதாவது அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.
ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் மிக ஆழமாகச் சுமார் 163 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அதன் மேலடுக்குத் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என்பதால் இங்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
பாதிப்புகள்
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், தரவுகளின்படி இவை எதுவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இல்லை.
நிலநடுக்கத்தின் அளவு 3.0 முதல் 4.7 ரிக்டர் வரை மட்டுமே இருந்ததால், இதுவரை எந்தப் பகுதியிலிருந்தும் உயிர்ச்சேதமோ அல்லது பாதிப்புகளோ பதிவாகவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
