“கூட்டணியில் இருந்து விசிக வெளியேற திமுகவே காரணம்”

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தருமபுரியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், “நான் எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் அமைச்சராகும் முடிவை எடுத்திருக்க மாட்டேன். எனக்கு பதவி ஆசை இல்லை. வன்னி அரசு 10 நாட்களாவது அமைச்சராக இருக்கட்டும் என நினைத்தேன். வஞ்சகமும் சூதும் நிறைந்த இந்த அரசியல் களத்தில், அவற்றை எல்லாம் தாக்கு பிடித்து இந்த இயக்கத்தை இன்றைக்கு இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். அமைச்சரவையில் ஒருவர் இடம் பெற்றிருக்கிறார் என்றால் திராவிட இயக்க தலைவர்கள் தானே முந்திக்கொண்டு பாராட்டி இருக்க வேண்டும். உங்களிடம் சொல்லாமல் நாங்கள் வெளியே வந்தோமா? இந்த முடிவை எடுக்கிற அந்த இரவு வரை உங்கள் இல்லங்களில் தானே அமர்ந்திருந்தோம்.

இந்த முடிவை எடுக்கும்போது கூட உங்களை தொடர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படி ஒரு முடிவை நாங்கள் எடுக்க நேர்ந்திருக்கிறது என்று சொன்னோமா இல்லையா? வாழ்த்தினீர்களா இல்லையா? இன்றைக்கு இந்த முடிவை எடுத்த ஒரே காரணத்திற்காக திருமாவளவன் இப்படியாக ஆகிவிட்டார், அப்படி ஆகிவிட்டார், நீர்த்து போகிவிட்டார்,  என்று இந்த தலைமையை குறிவைத்து இந்த தலைமையின் மீதான நம்பகத்தன்மையை உடைத்தெறிவதற்கு சிதறடிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்று தான் தேர்தல் முடிந்தவுடன் விசிகவின் கூடாரம் காலியாகிவிட்டது, எல்லாம் விஜய்க்கு பின்னால் போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். அட அற்பர்களே நள்ளிரவு 3 மணிக்கு முரப்பூர் ரயில்வே நிலையம் வந்து பாருங்கள். விடியற் காலை மூன்று மணிக்கு நான் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன் ஆயிரக்கணக்கான தோழர்கள் காத்து கிடந்து உறங்காமல் என்னை வரவேற்றார்கள்.

திமுகவை ஆதரித்த போது திமுக ஆதரவாளர்கள் எங்களை ஆதரித்தார்கள், திமுக எதிர்ப்பாளர்கள் எங்களை விமர்சித்தார்கள். இன்றைக்கு திமுக எங்களை கைவிட்டுவிட்டது அவ்வளவுதான், நாங்கள் வெளியேறவில்லை. நாங்கள் உங்களுடன் நம்பிக்கையோடு இருந்தோம். நல்லிணக்கமான நட்புதான் முக்கியம், ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன? விசிகவுக்கு 1 தொகுதியோ, 2 தொகுதியோ கூட்டி தருகிறோம் என்று பேசியிருந்தால் அந்த நல்லிணக்கமான உறவு தொடர்ந்து இருக்குமா? இல்லையா? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் திமுகவில் இருந்து வெளியேறியது அதற்கு என்ன காரணம்? 70 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் தொடர்ந்து பயணித்த ஐயூஎம்எல் வெளியேறியதற்கு என்ன காரணம்? மதிமுக சொந்த சின்னத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, முடியாது என்று உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்தீர்களே, அது அவர்களுக்கு கசப்பை தருமா? தராதா?அவர்கள் வெளியேற வேண்டும் என்று நினைப்பார்களா? நினைக்க மாட்டார்களா? கமல்ஹாசனுக்கு இரண்டோ மூன்றோ இடங்களை தந்து அந்த கட்சியை அரவணைத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? தனிச் சின்னத்தில் நிற்க அனுமதித்திருக்க வேண்டுமா? வேண்டாமா?

அந்த இடத்தில் நீங்கள் காட்டிய இறுக்கமான அணுகுமுறை இந்த அணி உடைவதற்கு காரணமாக இருந்தது என்று ஏன் யாரும் பேசவில்லை?. இந்த நல்லிணக்கமான உறவை சிதைத்தது திராவிட முன்னேற்ற கழகம் கையாண்ட அணுகுமுறை ஒரு காரணம் என்பதை எந்த நியாயஸ்தனும் பேசவில்லையே, எந்த நேர்வையாளனும் பேசவில்லையே.. 100 சதவீதம் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் விடுதலை சிறத்தைகள் நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு திருமாவளவன் பொறுப்பல்ல… காங்கிரஸ் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறை தான் காரணம், இடதுசாரிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறை தான் காரணம்.. தவெகவை குறைத்து மதிப்பிட்டது திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறை தான் காரணம். கணித்திருக்க வேண்டுமா வேண்டாமா? அதற்கேற்ப எதிரசியல் செய்திருக்க வேண்டுமா வேண்டாமா? கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேனா இல்லையா? ஏன் வழக்கு போடவில்லை? எதற்காக லிபரலாக நடந்து கொண்டீர்கள்? அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம்? காலம் தாழ்த்தி வந்தார், வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார், அதனால்தான் கும்பல் கூடியது நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தான் சாவுக்கு காரணம் என்கிற போது அதற்கு பொறுப்பேற்கக்கூடிய அத்தனை பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா வேண்டாமா? இந்த அணுகுமுறை தானே காரணம். அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தி இருக்க வேண்டுமா? வேண்டாமா?

உங்களை குறிவைத்து, திமுகவை குறி வைத்து மிகக் கடுமையாக விஜய் பேசும்போது விஜய்க்கு எதிர் அரசியலை பேசி இருக்க வேண்டும். நீங்கள் யாருமே பேசவில்லை நான் பேசினேன்.. ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று நான் பேசினேன். அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது? அவர் அதிமுக ஆதரவை கேட்கவில்லை, பா.ம.க ஆதரவை கேட்கவில்லை, பா.ஜ.க ஆதரவை கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவை கேட்டார், திருமாவளவன் ஆதரவை கேட்டார். அவருடைய நிலைப்பாடு இதுவாக தான் இருந்தது. 

Source link