போஜ்புரி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த மனோஜ் திவாரி, பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர், அரசியலில் களம் கண்ட இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது, பாஜகவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு ஒளிபரப்பான பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அந்த சமயத்தில் சிறுமியாக இருந்த அவரது மகள் ரிதி திவாரி இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துள்ளார். குறிப்பாக, தனது தந்தை பங்கேற்ற காட்சிகளை ஆவலுடன் பார்த்து வந்த அவருக்கு, இந்த நிகழ்ச்சி மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பிரபல பாடகியாக உயர்ந்துள்ள அவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது. அதன்படி, தனது தந்தையின் வழியைப் பின்பற்றி பாடகி ரிதி திவாரியும் தற்போது அதே ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராகக் களம் இறங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தனது குடும்ப பின்னணியால் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய அவர், ”நான் எந்த கருத்தைச் சொன்னாலும் அது என்னுடைய கருத்தாக எடுத்துக்கொள்ளப்படாமல், ஒரு அரசியல்வாதி மகள் என்ற கோணத்திலேயே அணுகப்படுகிறது. எனது தனிப்பட்ட கருத்துகள் அனைத்தும் மக்களின் பார்வையில் எனது தந்தையின் அரசியல் கருத்தாக மாற்றப்பட்டு விடுகின்றன. இதன் காரணமாகவே, சிலர் இணையதளத்தின் மூலமாக எனக்குக் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் பலாத்கார மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். ஒரு அரசியல் பிரபலத்தின் மகளாக, இரட்டை அழுத்தத்துடனேயே வாழ்கிறேன்’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
