ஒரு ஜென் ஸீ இளைஞரின் தமிழ்ப் பற்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் பிராமி எழுத்துகளைத் தன் சாதனையால் மீண்டும் உலகறிய வைத்திருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா. வெறும் 12 நிமிடங்கள் 8 விநாடிகளில் 247 எழுத்துகளையும் எழுதி, ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’இல் இவர் தடம் பதித்திருக்கிறார்.

படித்துக்கொண்டே…

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா, ஒரு ‘2கே கிட்’. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் பட்டம் பெற்று, தற்போது ஐ.ஐ.எம். மும்பையில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். சமூக ஆர்வலர், சாதனையாளர், பயண விரும்பி எனச் சுழன்று வருகிறார்.

ஏற்கெனவே 2022இல் கண்களைக் கட்டிக்கொண்டு 53.94 நொடிகளில் ரூபிக்ஸ் கியூப் புதிரை விடுவித்து ‘வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பிடித்தவர். அந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. தற்போது தமிழ் பிராமி எழுத்துகளை எழுதி மற்றுமொரு சாதனையைப் படைத்திருக்கிறார்!

சாதனைக்குப் பின்னால்…

“2020 கரோனா பொது முடக்கக் காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அப்போது ஒரு நிமிடத்துக்கும் அதிகமான நேரத்தில் ரூபிக்ஸ் கியூப் புதிரை விடுவித்தல் சாதனையாக இருந்தது. அதை முறியடிக்க வேண்டும் என்கிற இலக்குடன் ரூபிக்ஸ் கியூப் பயிற்சி செய்தேன்.

அப்படித்தான் முதல் சாதனையைப் படைத்தேன். அப்பாவுக்குத் தமிழ் மீது அதிகப் பற்று. இதனால் தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பதில், கல்வெட்டுகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. தொல்லியல் துறையைச் சேர்ந்த நண்பர் சுபப்பிரியன் தொடர்ந்து அளித்த ஊக்கத்தால் தமிழி எழுத்துகளை எழுதலாம் என முயற்சி செய்து பார்த்தேன். இப்படித் தமிழி எழுத்துகளை எழுதி, ஒரு சாதனையைப் படைப்பது இதுவே முதல்முறை” என்கிறார் அஸ்வின் கிருஷ்ணா.

அங்கீகாரம்

‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனங்கள் மின்னஞ்சல் வழியாக அஸ்வினின் தமிழி எழுத்து சாதனையை அங்கீகரித்துள்ளன. விரைவில் அதற்கான சான்றிதழையும் வழங்க உள்ளன. இச்சாதனையை நிகழ்த்துவதற்காகப் பல மாதங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதாகச் சொல்கிறார் அவர்.

“தமிழி எழுத்துகளிலிருந்துதான் தமிழ்ப் பிறந்தது என்கிற விழிப்புணர்வு இன்றைக்கும் குறைவாக இருக்கிறது.

உலகின் பழமையான எழுத்துமுறைகளில் இதுவும் ஒன்று. 6–7 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தேன். முதலில் என்னால் முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. என்றாலும், முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று களத்தில் இறங்கினேன். இதைப் பார்த்து தமிழ் பிராமி எழுத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதோடு, இச்சாதனையை யாராவது முயற்சி செய்தாலோ, தமிழ் பிராமி குறித்துத் தேடிச் சென்று படித்தாலோ, அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் அஸ்வின்.

நீங்களும் சாதிக்கலாம்

இணையத்தில் தேடலும் ஆர்வமும் இருந்தாலே, சாதனை முயற்சிகளுக்கான வழிகாட்டுதல்களைப் பெற முடியும் என்கிறார் அஸ்வின். “தமிழை வாசிக்க வேண்டும். நம் மரபைத் தெரிந்துகொள்ள வேண்டும். கற்றுக்கொள்வதைத் தாண்டி, அடுத்த தலைமுறைக்கும் தமிழைக் கடத்த வேண்டும். பொதுவாகச் சாதனைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என எந்தப் பிரிவில் உங்கள் சாதனை வரும் என்பதைத் தேர்வு செய்து, அதற்கேற்ப விண்ணப்பிக்க வேண்டும்.

சில குழுக்கள் சாதனைக்கு விண்ணப்பிக்கும்போதே கட்டணம் கேட்பார்கள். சிலர் அங்கீகாரம் கிடைத்த பிறகு, அதிகாரபூர்வமாகச் சான்றிதழ் வழங்குவதற்கு மட்டும் கட்டணம் கேட்பார்கள். அதுபோன்ற நடைமுறைதான் சிறந்தது.

சில சாதனைகளை நேரில் பார்த்து அங்கீகரிப்பார்கள். தமிழ் பிராமி சாதனையைப் பொறுத்தவரை, காணொளிகளை மின்னஞ்சலில் அனுப்பி விண்ணப்பித்தேன். ஒருவர் மேற்பார்வையாளராக இருந்து, சாதனை நிகழ்த்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவரது விவரங்களையும் அனுப்ப வேண்டும். சாதனை படைக்க ஆர்வம் இருப்பவர்கள் இணையதளத்தில் தேடினாலே போதுமான வழிகாட்டுதல் கிடைக்கும். அந்தத் தேடல்தான் முக்கியம். நீங்களும் ஒரு நாள் சாதனையாளர் ஆகலாம்” என்கிறார் அஸ்வின் கிருஷ்ணா.

Source link