டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது என்றிருந்த நிலையில், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் 14,216 ரன்கள் எடுத்து, சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 1,705 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் உள்ளார். இதனால், சச்சினை ரூட் முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ், ரூட்டுக்கு ஆதரவாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
‘டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஜெஃப்ரி பாய்காட் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய ரிச்சர்ட்ஸ், “ரூட் தொடர்ந்து இங்கிலாந்துக்காக விளையாடினால், சச்சினின் சாதனையை முறியடிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதை அடைவதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. அது அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்” என்றார்.

ரூட் தற்போது கேப்டனாக இருப்பதால், இந்தச் சாதனையை நோக்கிப் பயணிக்க அவருக்கு நல்ல சூழல் இருப்பதாகவும் ரிச்சர்ட்ஸ் குறிப்பிட்டார்.
மேலும், இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமை இதுவரை ஜெஃப்ரி பாய்காட்டுக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரிச்சர்ட்ஸ், “அந்தப் பெருமை இனி ஜோ ரூட்டுக்கு மாற்றப்படும் என்பதை பாய்காட்டுக்கு உணர்த்தும் செய்தியாக இது இருக்கும்” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
