இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் சலுகை காலம் ரத்து?

Summary

அமெரிக்காவில் வெளிநாட்டு பாண்டியர்களின் எச்1பி விசா புதுப்பிப்பு சலுகை காலத்தை ரத்து செய்யும் முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2025 இல் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற டிரம்ப் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

சட்டவிரோத குடியேற்றங்களை முழுவதுமாக தடுக்கும் அதே வேளையில் சட்டப்பூர்வக் குடியேற்றங்களை மேலும் கட்டுப்படுத்தும் கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற தனது கொள்கையின்படி அவரது நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்கு பணிபுரியும், பயிலும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களுக்கு கஷ்டகாலமாக மாறி வருகிறது.

நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவரது நிர்வானம் நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அதற்கு இணையான தகுதிவாய்ந்த அமெரிக்க விண்ணப்பதாரர்களை நியமிக்க வேண்டும் என கெடுபிடி காட்டப்படுகிறது.

ஏற்கெனவே விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுடன், தற்காலிகமாக இமிக்ரண்ட் விசா நேர்காணல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

H-1B சலுகைக் காலம் ரத்து?

இந்நிலையில் வேலை இழக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் H-1B விசாவில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace period) ரத்து செய்யும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

அமெரிக்காவின் பெடரல் பதிவேட்டில் (அரசிதழ்) வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய முன்மொழிவின்படி, H-1B மற்றும் அது தொடர்பான பணி விசா வைத்திருப்பவர்கள் தங்களது வேலையை இழக்கும் பட்சத்தில், உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுக்குப் புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ளவோ அல்லது தங்களது குடும்பத்தினருடன் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைசெய்யவோ அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.

புதிய முன்மொழிவு செயல்பாட்டுக்கு வந்தால் இனி அந்த அவகாசம் கிடைக்காது.

இந்தியர்களுக்குப் பின்னடைவு

அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் H-1B விசாவைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்களில் இந்தியர்களே அதிகளவில் உள்ளனர்.

டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்டீரி போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும், டெலாய்ட் , இடபிள்யூசி, எர்ன்ஸ்ட் அண்ட் யங் போன்ற நிறுவனங்களும் இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால், அமெரிக்காவில் உள்ள இந்தியப் வல்லுநர்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் இடையே இந்த நடவடிக்கை பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

அடுத்தது என்ன?

அமெரிக்காவின் சட்டத்தின்படி ஒரு புதிய விதியை அமல்படுத்தும்போது அது முதலில் மக்கள் மற்றும் சம்பந்தபட்டவர்கள் கருத்துக்கு 60 நாட்கள் விடப்படும்.

60 நாட்கள் அவகாசம் முடிந்ததும், பெறப்பட்ட கருத்துகளை உள்துறை பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்ட விதியில் சிறு மாற்றங்களையோ அல்லது தளர்வுகளையோ கொண்டு வர அரசு தீர்மானிக்கலாம்.

பரிசீலனைக்குப் பிறகு, இறுதி விதி தயாரிக்கப்பட்டு மீண்டும் பெடரல் பதிவேடு அலுவலகம் அதனை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் இதை எதிர்த்து பாதிக்கப்புக்குள்ளாவோர் பெடரல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். அதை விசாரித்து நீதிமன்றம், அந்த விதிக்கு இடைக்கால தடை விதிக்கலாம்.

Source link