இந்தியாவில் தனது தொழில்நுட்ப முதலீட்டை மேலும் விரிவாக்கும் வகையில், கூகுள் நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ‘அனந்தா’ (Ananta) என்ற புதிய பிரம்மாண்ட வளாகத்தை திறந்து வைத்துள்ளது.
உலகளவில் கூகுளின் மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த வளாகம், நவீன வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
‘அனந்தா’ – எல்லையற்ற சாத்தியங்களின் அடையாளம்
சமஸ்கிருத மொழியில் ‘அனந்தா’ என்றால் “எல்லையற்றது” அல்லது “முடிவில்லாதது” என்று பொருளாகும். தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் உள்ள எல்லையற்ற சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் வகையில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கூகுள் இந்திய அலுவலகக் குழுவும், உள்நாட்டு வடிவமைப்புத் குழுவும் இணைந்து இந்த நவீன வளாகத்தை வடிவமைத்துள்ளன. பணியாளர்களிடையே ஒத்துழைப்பையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் தூண்டும் வகையில் அனந்தா வளாகத்தின் ஒவ்வொரு தளமும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது: நகர அமைப்பிலான தளம்: அலுவலகத்தின் ஒவ்வொரு தளமும் ஒரு நகரத்தின் தெருக்களைப் போல ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், ஊழியர்கள் எளிதாக நடமாட முடியும்.
வசதிகள்
குழு அக்கம் பக்கம் (Neighborhoods): பணியாளர்கள் ஒன்றிணைந்து உரையாடவும், அதே நேரத்தில் அமைதியான முறையில் தனித்து கவனம் செலுத்திப் பணியாற்றவும் சிறிய அறைகளும் (Booths) அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சபா (Sabha): கட்டிடத்தின் மையப்பகுதியில் ‘சபா’ என்ற மிகப்பெரிய சமூகக்கூடம் உள்ளது. இது பணியாளர்கள் ஒன்று கூடிப் பேசுவதற்கும், கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும், ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கும் உதவுகிறது.
இயற்கை ஒளி: கட்டிடத்தின் தனித்துவமான வடிவமைப்பு அதிகளவு இயற்கை ஒளியை உள்ளே அனுமதிப்பதுடன், சுற்றியுள்ள எழில்மிக்க காட்சிகளையும் காண வழிசெய்கிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற ஊழியர்கள் எவ்வித சிரமுமின்றி இயங்குவதற்குப் பல சிறப்பு வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்கான தொடு உணர்வுத் தளங்கள் (Tactile Flooring), பிரெய்லி வழிகாட்டிகள் மற்றும் எளிதில் அணுகக்கூடிய பிற உள்கட்டமைப்பு வசதிகள் கட்டிடம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பூங்கா நகரத்தின் அழகியல்: ‘அரண்யா’ அடர் வனம்
பெங்களூர் நகரின் “பூங்கா நகரம்” (Garden City) என்ற பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில், அலுவலகத்தைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் மரங்களும் செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் ஓய்வு நேரத்தில் நடைப்பயிற்சி செய்யவும், சாதாரணமாக உரையாடவும் நடைபாதைகளும் ஓட்டப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘அரண்யா’ எனப்படும் செயற்கைக் காடு, வெளிப்புறச் சாலைகளின் போக்குவரத்துச் சத்தத்தைக் குறைத்து, அமைதியான சூழலை வழங்குகிறது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த வளாகம் பல பசுமை அம்சங்களைக் கொண்டுள்ளது: கழிவுநீர் மறுசுழற்சி: வளாகத்தில் உருவாகும் கழிவுநீரில் 100% சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவிலேயே உற்பத்தி
மழைநீர் சேகரிப்பு: நூற்றுக்கணக்கான லிட்டர் மழைநீர் வளாகத்திலேயே சேகரிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்பம்: நாட்டின் மிகப்பெரிய ‘எலக்ட்ரோ-க்ரோமிக்’ ஸ்மார்ட் கண்ணாடிகள் நிறுவல் மூலம் மின்சார நுகர்வு கணிசமாகக் குறைக்கப்படுகிறது.உள்நாட்டுப் பொருட்கள்: கட்டிடத்தின் உட்புற அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
இந்தியாவிலிருந்து உலகிற்கான தொழில்நுட்பம்
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் கூகுள், AI வெள்ள முன்னறிவிப்பு, காசநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் AI மாதிரிகள் மற்றும் கூகுள் பே (Google Pay) போன்ற சேவைகளின் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
‘அனந்தா’ வளாகம்
“இந்தியாவிலிருந்து உலகிற்காக உருவாக்குவது” என்ற கூகுளின் லட்சியத்திற்குப் பெங்களூரின் ‘அனந்தா’ வளாகம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்தியப் பொறியாளர்களின் திறமையால் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
