கடன் வாங்குறீங்களா? வங்கிகளுக்கு இனி அலைய வேண்டாம் செப்டம்பர் 15 முதல் ஆவணப் பதிவில் புதிய நடைமுறை! தமிழக அரசு சூப்பர் அப்டேட் – taking a bank loan no more office visits for document registration from sept 15

வங்கிகளில் கடன் பெறும்போது சமர்ப்பிக்கப்படும் முக்கிய ஆவணங்களைப் பதிவு செய்ய இனி நேரில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. செப்டம்பர் 15, 2026 முதல் உரிமை ஆவண வைப்பு பத்திரம் மற்றும் பெறுகை பத்திரம் ஆகியவற்றை நேரில் வருகையில்லாமல் மின்னணு முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு அமல்படுத்துவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது சமர்ப்பிக்கப்படும் முக்கியமான இரண்டு ஆவணங்களை இனி நேரில் செல்லாமல் பதிவு செய்யும் புதிய நடைமுறை தமிழகத்தில் அறிமுகமாகிறது. பதிவுத்துறையின் ப்ராஜெக்ட் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ்செயல்படுத்தப்படும் எங்கிருந்தும் ஆவணப் பதிவு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் உரிமை ஆவணங்களை வைப்பு செய்வதற்கான பத்திரம் மற்றும் பெறுகை பத்திரம் ஆகிய இரண்டு ஆவணங்களும் இனி நேரில் வருகையில்லாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்கு நேரில் செல்ல தேவையில்லை

புதிய நடைமுறையால், இந்த ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பித்து, பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே எங்கிருந்தும் ஆவணப் பதிவு திட்டத்தின் கீழ் சிலஆவணங்களை நேரில் வராமல் பதிவு செய்யும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அதன் அடுத்தகட்டமாக தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான இந்த இரண்டு ஆவணங்களும் இந்த நடைமுறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடன் பெறும்போது முக்கியமான ஆவணங்கள்

வங்கிகள் வழங்கும் கடனுக்கு பாதுகாப்பாக, சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமை ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து பதிவு செய்வது வழக்கமான நடைமுறையாகும். இதற்கான உரிமை ஆவண வைப்பு பத்திரமும் இந்த புதிய முறையில் பதிவு செய்யப்படும்.அதேபோல், கடன் தொகை முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, அந்தக் கடனுக்காக சொத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த பொறுப்பு நீக்கப்பட்டதை பதிவு செய்வதற்கான பெறுகை பத்திரமும் நேரில் வராமல் பதிவு செய்யப்படும்.

பதிவு நடைமுறை வேகமாகும்

இந்த புதிய நடைமுறையால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய தேவை குறையும். இதன் மூலம் அலுவலகங்களில் ஏற்படும் நேரடி வருகையும், கையால் மேற்கொள்ளப்படும் பணிகளும் குறைந்து, ஆவணப் பதிவு நடைமுறை விரைவாக நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அடமானம் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாகக் கண்காணிக்கவும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பாதுகாப்பான மின்னணு முறையில் சேமித்து வைக்கவும் முடியும்.

ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் வசதி

நேரில் வருகையில்லாமல் பதிவு செய்யப்படும் ஆவணங்களில் பதிவு அதிகாரியின் மின்னணு கையொப்பம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் சரிபார்ப்பதற்கான குறியீடு உள்ளிட்ட பாதுகாப்புஅம்சங்கள்இடம்பெறும். இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை எளிதாகச் சரிபார்க்க முடியும்.

TVK அரசின் புது சாதனை!ஒரே TENDER க்கு 9 பேர் போட்டி! யாரும் செய்யாததை செய்யும் CM

இந்த நடைமுறை மூலம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள மின்னணு உள்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் இந்த இரண்டு ஆவணங்களுக்கான புதிய பதிவு நடைமுறை செப்டம்பர் 15, 2026 முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link