பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார். இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாலமன் பாப்பையா உடலுக்கு திமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் பேசுகிறோம். இந்த இழப்பு தாங்க முடியாத பேரிழப்பு. அவருக்கு செலுத்தக்கூடிய இறுதி மரியாதை என்பது, அவர் வழியில் நின்று தமிழ் மொழியைக் காக்க வேண்டும். அவரைப் போல எல்லோரிடமும் இனிமையாகவும், கண்ணியமாகவும் பழக வேண்டும். இவரை விரும்பாதவர்கள் எவருமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எல்லோருடைய இதயத்திலும் இடம்பெற்ற சாலமன் பாப்பையா வீட்டில் இருக்கிற பிள்ளைகளை மட்டுமல்ல, இந்த நாடு முழுவதும், உலகம் முழுவதும் தமிழ் பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கின்றார்.
எல்லோரும் அவர் வழியிலே நடந்து, அவரைப் போலவே எல்லோரிடமும் நல்ல முறையில் பழகி, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதுதான் அவருக்குச் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்கும். மு.க. ஸ்டாலின் மிகுந்த கலக்கமுற்றுப் போயிருக்கின்றார். எங்களுடைய இறுதி மரியாதையைச் செலுத்தி இருக்கிறோம். எங்கள் நெஞ்சத்திலே நிறைந்து நிற்பார்; நிலைத்து நிற்பார். சாலமன் பாப்பையாவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய இறுதி வணக்கம்.
சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும். அதற்குரிய எல்லா தகுதிகளும் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்தபொழுது, தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் அரசு ரீதியாகச் சொல்லியிருக்கின்றோம். ஒன்றிய அரசு தர வேண்டிய மிகப்பெரிய பத்ம விருதுகளைத் தர வேண்டும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலே இப்படி ஒரு அறிஞருக்கு இருக்கை இருப்பது என்பது எல்லோருக்கும் கிடையாது. இது உலகத்திலேயே தனிப்பட்ட முறையில் இவருக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று. எனவே, விருதுகள் அவரைத் தேடி வர வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
