சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு தர, இந்திய கம்யூ., திடீர் நிபந்தனை விதித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. தவெக, திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த தேர்தலில், தவெகவுக்கு காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
ஆனால், தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும், இ.கம்யூ., மா. கம்யூ., கட்சிகள், தங்கள் ஆதரவை அறிவிக்கவில்லை. எனவே, அக்கட்சிகளிடம், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியிலும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு இ.கம்யூ., போட்டியிட முடிவு செய்துள்ளது.
எனவே, ‘அந்த தொகுதியில், இ.கம்யூ., வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், தவெகவுக்கு ஆதரவு அளிக்க தயார்’ என, இ.கம்யூ., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல், முதல்வர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தவெக தலைமையின் முடிவு தெரிந்த பின், இ.கம்யூ., நிர்வாக குழு கூட்டப்பட்டு, வரும் 15ம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, கம்யூ., கட்சிகளின் ஆதரவை பெற, திமுக தரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, தவெக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, இ.கம்யூ., நிர்வாகக் குழு, சென்னையில் நாளை (செப்.12) கூடி முடிவெடுக்கிறது.
இது குறித்து, கட்சியின் தமிழக செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ”இடைத்தேர்தல் தொடர்பாக, இடதுசாரி கட்சியினர், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி சார்பில், நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது. அதில், ஆலோசித்து முடிவு எடுப்போம்,” என்றார்.
