டில்லிக்கு வந்தது பறக்கும் கிரெம்ளின் மாளிகை!

புதுடில்லி: டில்லியில் நடக்கும் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் , ‘ பறக்கும் கிரெம்ளின்’ என அழைக்கப்படும் தனது தனி விமானத்தில் வந்துள்ளார். அத்துடன், அவர் பயணிக்கும் அதிநவீன பாதுகாப்பு காரான ‘ஆரஸ் செனாட்’ டில்லி கொண்டு வரப்பட்டு உள்ளது.

ரஷ்ய அதிபர் புடின், 25 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் தலைவராக இருந்து வருகிறார். பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் குறி வைத்திருக்கும் தலைவராக அவர் இருக்கிறார். இதனால் அவரது பாதுகாப்புக்கு, அந்த நாட்டு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அவர் பயணிக்கும் விமானம் மற்றும் கார்களின் பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டில்லி வந்துள்ள புடின் பாதுகாப்பை கருதி, அவர் ரஷ்யாவில் பயன்படுத்தும் கார் டில்லி கொண்டுவரப்பட்டுள்ளது.

‘சக்கரங்களின் கோட்டை ‘ என்று அழைக்கப்படும் இந்த காரின் வியக்க வைக்கும் சிறப்பு அம்சங்கள் :

ரஷ்ய அரசின் கோர்டெஷ் திட்டத்தின் கீழ் , ரஷ்யாவின் ‘ஆர்ஸ் மோட்டார்ஸ்’ ரஷ்ய அரசு ஆராய்ச்சி நிறுவனமான என்ஏஎம்ஐ , சோலர்ஸ் ஜேஎஸ்சி மற்றும் யுஏஇயின் தாவாஜூதின் ஹோல்டிங் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்தக்காரை தயாரித்துள்ளன. பொது மக்களுக்கான இக்காரின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 2.50 கோடி ரூபாய் ஆகும். புடினுக்காக அதிநவீன ராணுவ தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

சோவியத் காலத்தின் ‘ZIS-110’ லிமோசின் காரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு 2018 ம் ஆண்டு இக்கார் அறிமுகம் செய்யப்பட்டது. 5,630 மிமீ நீளம், 2000 மிமீ அகலம் மற்றும் 1700 மிமீ அகலம் கொண்டது. அதிகபட்ச வேகமாக மணிக்கு 160 கிமீ., ஆகும். சுமார் 9 வினாடிகளிலேயே 100 கிமீ வேகத்தை எட்டக்கூடும். ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4.4லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் கொண்டது இந்த கார். 598 குதிரைத்திறன் மற்றும் 880 எம்எம் Torque கொண்டது.

இக்காரில் ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அதிநவீன பிரேக்கிங் அமைப்புகள் உள்ளிட்டவை உள்ளன. இக்காரில் குண்டு துளைக்க முடியாதபடி பல அடுக்கு கண்ணாடிகள் மற்றும் தடிமனான ஸ்டீல் பிளேட்டிங், வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் இருந்து முழு பாதுகாப்பு அளிக்கிறது.டயர்கள் பஞ்சர் ஆனாலும், வெடித்தாலும் தொடர்ந்து பயணிக்கும். அதிநவீன தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் காலநிலைக்கு ஏற்ப சொகுசு இருக்கைகள் உள்ளன.

விமானத்தின் சிறப்புகள்

ரஷ்ய அதிபர் புடின் பறக்கும் கிரெம்ளின் அல்லது அழிவு நாள் விமானம் என்று குறிப்பிடப்படும், இல்யூஷின் ஐஎல் 300 பியூ வந்துள்ளார். ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் இந்தியா வந்துள்ளன. அதில் ஒன்றில் தான் புடின் பயணம் செய்துள்ளார்.புடின் எந்த விமானத்தில் இருக்கிறார் என்பதை எதிரிகள் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு பயணம் செய்கிறார்.இந்த வகை விமானங்கள் 1980களில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. ரஷ்ய அதிபருக்கான கட்டளை மையம் ஆக செயல்படுகிறது. நீண்டதூரம் பறக்கக்கூடிய நான்கு இன்ஜின்கள் கொண்ட இந்த ரஷ்ய விமானம் மிக மோசமான சூழ்நிலைகளிலும் தலைவர்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவியாட்விகேட்டல் பிஎஸ் 90-ஏ டர்போபேன் இன்ஜின்களை கொண்ட இந்த விமானம், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தடையின்றி 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறக்கும் திறன் கொண்டது. 55.35 மீட்டர் நீளமும், 60.12 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது.அவசர காலங்களில் முழுமையான நடமாடும் கட்டளை மையமாக செயல்படக்கூடியது. இது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ராணுவம், உளவுத்துறை மற்றும் அரசு கட்டமைப்புகளை பாதுகாப்பாக தொடர்பு கொள்ளக்கூடிய அமைப்புகள் இதில் உள்ளன.இந்த விமானம் ரேடார் ஜாமிங் தொழில்நுட்பத்தையும், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளையும் கொண்டு உள்ளது. இது தடையற்ற மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பைப் பராமரிக்கக்கூடிய செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் தரவு அலைவரிசைகளை கொண்டு உள்ளது.

Source link