எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நாளை 'தினமலர்' பவள விழா

சென்னை: சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நாளை( செப்.,12), ‘தினமலர்’ பவள விழா நடக்கிறது.

‘தினமலர்’ பவள விழாவை முன்னிட்டு, கடந்த, 5ம் தேதி, சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நினைவு தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, ‘தினமலர்’ நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் தமிழ்ப்பேராயம் அமைப்பும் இணைந்து நடத்தும், ‘தினமலர்’ பவளவிழா நாளை நடக்கிறது.

காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை முனைவர் தி.பொ.கணேசன் சிற்றரங்கத்தில் நடக்கும் பவள விழாவிற்கு, பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகிக்கிறார். காலை, 9:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்குகிறது. தமிழ்ப்பேராயம் தலைவர் கரு.நாகராசன் வரவேற்புரை ஆற்றுகிறார். எழுத்தாளர் இந்துமதி வாழ்த்துரை வழங்குகிறார்.

காலை, 10:30 மணிக்கு, ‘ஒரு பத்திரிகையால் என்ன சாதிக்க முடியும்; அதில், ‘தினமலர்’ நாளிதழ் என்ன சாதித்திருக்கிறது’ என்ற தலைப்பில், எழுத்தாளர் ஜெயமோகன் கருத்துரை வழங்குகிறார். காலை, 11:15க்கு, ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை கட்சி சார்ந்ததா, சாராததா’ என்ற தலைப்பில், அரசியல் அரங்கம் நடக்கிறது. வழக்கறிஞர் சுமதி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். த.வெ.க., முதன்மை செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் சபாபதி மோகன், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா, பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் ஆகியோர், தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

பகல், 12:00 மணிக்கு, ‘தினமலரும் நானும்’ என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகிறார். 12:30 மணிக்கு, ‘தினமலர்’ நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் வாசகர்கள் பங்கேற்கும் நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

Source link