காலி மது பாட்டில்களை திரும்ப பெற கடைகளில் இயந்திரம்: டாஸ்மாக் முடிவு

சென்னை: காலி மது பாட்டில்களை திரும்பப் பெற, ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ இயந்திரங்களை நிறுவ, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுபான காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மாநிலம் முழுதும், டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. அதாவது, கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில் திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டாஸ்மாக் தரப்பில் வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி, ஜூலை 31 வரை திரும்ப பெற்ற மது பாட்டில்கள், அவற்றை விற்பனை செய்ததன் வாயிலாக கிடைத்த தொகை குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தார்.

தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதாடியதாவது:

மாநிலத்தில், 3,332 டாஸ்மாக் கடைகளில் ஜூலை 31 வரை காலி மது பாட்டில்கள் விற்பனை வாயிலாக 148 கோடி 40 லட்சத்து 88,447 ரூபாய் கிடைத்துள்ளது. ஜூலை 31ம் தேதி வரை, மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்த தொகை, 51 கோடி, 82 லட்சத்து 2,246 ரூபாய்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றி அமைக்கும் கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. அதாவது, இத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், பணியாளர்கள் சுமையை குறைக்கும் வகையில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெற, ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ இயந்திரங்களை நிறுவ, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக, 20 ரூபாய் வரி வசூலிப்பது தொடர்பாக, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. புதிய வழிமுறையை அமல்படுத்த, மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று மாத காலம் அவகாசம் வழங்கினார். மேலும், ‘காலி மது பாட்டில்களை திரும்பப் பெற இயந்திரங்களை நிறுவும் திட்ட நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதுவரை தற்போதைய நடைமுறை தொடர வேண்டும்’ என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Source link