லீட்ஸ்: கவுன்டி போட்டியில் ‘சுழலில்’ அசத்திய குல்தீப் யாதவ், 10 விக்கெட் சாய்த்தார்.
இங்கிலாந்தில், கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-1 தொடர் நடக்கிறது. லீட்சில் நடந்த போட்டியில், யார்க் ஷயர் அணி (390/10), இன்னிங்ஸ், 106 ரன் வித்தியாசத்தில் எசக்ஸ் அணியை (171/10, ‘பாலோ-ஆன்’ 113/10) வீழ்த்தியது.
இப்போட்டியில், யார்க் ஷயர் அணிக்காக விளையாடிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் (4/10, 6/50) கைப்பற்றினார். இதன்மூலம் முதல் தர போட்டி வரலாற்றில், முதல் முறையாக இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தினார்
குல்தீப். இதுவரை 53 முதல் தர போட்டியில், 199 விக்கெட் சாய்த்துள்ளார். கவுன்டி போட்டியில் இவரது செயல்பாடு, இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க உதவலாம். கடந்த 2017ல் டெஸ்டில் அறிமுகமான குல்தீப், இதுவரை 19 போட்டியில், 80 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
மானவ் சுதார் சாதனை
கார்டிப் நகரில் நடந்த போட்டியில் வார்விக் ஷயர் அணி (391/10), இன்னிங்ஸ், 257 ரன் வித்தியாசத்தில் கிளாமார்கன் அணியை (69/10, 65/10) வீழ்த்தியது. இப்போட்டியில் வார்விக் ஷயர் அணிக்காக ‘சுழலில்’ அசத்திய இந்தியாவின் மானவ் சுதார், இரு இன்னிங்சிலும் (0/1, 0/2) ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட் சாய்த்தார்.
முதல் தர போட்டி வரலாற்றில், இரு இன்னிங்சிலும் ஒரு ரன் கூட வழங்காமல், குறைந்தபட்சம் ஒரு விக்கெட் கைப்பற்றிய 2வது பவுலரானார் மானவ் சுதார். இதற்கு முன், 1895ல் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் லீசெஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் டாம் ஹேவர்ட் (6 பந்தில், 3 விக்கெட்) இப்படி சாதித்திருந்தார்.
