தொடர்ந்து 99 வாரங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த பெலாரசின் அரினா சபலென்கா, தனது நம்பர் 1 இடத்தை இழந்ததால் திடீரென டிரெண்டானார்.
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஒரு இடம் முன்னேறி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.
ரிபாகினா நம்பர் 1
27 வயதான ரிபாகினா தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கும் 30-வது மங்கை. முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரியணையில் ஏறி தொடர்ந்து 99 வாரங்கள் ‘நம்பர் ஒன்’னாக வலம் வந்த பெலாரசின் அரினா சபலென்கா 2-வது இடத்துக்கு தள்ளப்பட் டார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிபாகினா
இந்நிலையில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தை அடைந்துள்ளது குறித்து சபலென்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகத் தரவரிசையில் முதலிடத்தை அடைவது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்றாகப் புரிந்துகொள்கிறேன்.
அது என் இலக்குகளில் ஒன்றாகவும் இருந்தது. ஆனால் தற்போதைக்கு என்னால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
சீசனின் நடுப்பகுதியில் அவ்வளவாக சிறப்பாகச் செயல்படவில்லை. எலினா பொறுப்பேற்று மிகவும் சிறப்பாக விளையாடினார்.
என்னால் என் மீது மட்டுமே கவனம் செலுத்தவும், நிகழ்காலத்தில் நிலைத்திருக்கவும், இப்போதே என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்யவும் முடியும்.
என் ஆட்டத்தை இறுக்கமாகக் கொண்டு சென்றால், ஒருவேளை அவரிடம் இருந்து நான் மீண்டும் முன்னிலையைப் பெறக்கூடும் என தெரிவித்தார்.
