திருப்பரங்குன்றம் மலை அளவீட்டில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: ‘மதுரை திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை உள்ளது?’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

மதுரை, ரமேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீது ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனர்.

இவ்வழக்கை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாரயணன், ‘மலையை அளவீடு செய்யும் உத்தரவிற்கு எதிராக அறநிலையத்துறை கமிஷனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்நீதிமன்றம், ‘உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அவமதிப்பு வழக்கில் மனு தாக்கல் செய்யலாம். இங்கு மனுவில் எழுப்பிய வாதங்களை அங்கு முன்வைக்கலாம்’ என, உத்தரவிட்டது.

‘மொத்த மலையையும் அளவிட வாய்ப்பில்லை. மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்திற்கு அப்பால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை’ என்றார்.

நீதிபதிகள், ‘கோவிலின் நலன் கருதி அதன் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் உத்தரவிட்டோம். இவ்விவகாரம் கோவில், தர்கா, தொல்லியல்துறை சம்பந்தப்பட்டது. இதில், அறநிலையத்துறைக்கு எத்தகைய வேலை உள்ளது?’ என, கேள்வி எழுப்பியது.

அறநிலையத்துறை தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, செப்., 25க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link