வரலாற்றில் புதிய மைல்கல்; பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்

லண்டன்: இந்திய விமானப்படையில் தகுதிபெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர்.

இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மைல்கல்லாக, இந்திய விமானப்படையில் தகுதி பெற்ற பயிற்றுநர்கள் 3 பேர், பிரிட்டன் அதிவேக ஜெட் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் விமானப்படையில் இணைந்துள்ளனர். இந்திய பாதுகாப்புத் துறையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்திய விமானப்படை வரலாற்றிலேயே, அதன் பயிற்றுநர்கள் பிரிட்டனில் அந்நாட்டு அதிவேக போர்விமான (Fast-jet) விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பது இதுவே முதல் முறை. ஜெட் ரக விமானங்களை இயக்குவதில் பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பார்கள்; இந்த மூன்று பயிற்றுநர்களும் 2 ஆண்டுகள் அங்கு பணியாற்றுவார்கள்.

பிரிட்டன் தளபதிகளின் கீழ் இவர்கள் பயிற்சி பணிகளை மேற்கொண்டாலும், தொடர்ந்து இந்திய விமானப்படையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழேயே செயல்படுவார்கள். இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று முக்கிய ராணுவ அகாடமியிலும் இந்திய அதிகாரிகள் பயிற்றுநர்களாகப் பணியாற்றும் பெருமையைப் பெற்றுள்ளனர்.

இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வு. இந்திய விமான படையில் தகுதிபெற்ற பயிற்றுநர்கள் 3 பேர், ராயல் விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக வேல்ஸில் உள்ள விமானப்படையில் இணைந்துள்ளர். இந்தியா-பிரிட்டன் இடையே உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இவ்வாறு இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Source link