கேரளத்தில் அலுவலகம் சார்ந்த இடங்களில் முதியோர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதியோர் நலத்துறையினால் இந்த திட்டம் நேற்று (11-09-26) தொடங்கப்பட்டுள்ளது, இதன்படி முதியோர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுக்கான சேவையைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை முதியோர் நட்பு அலுவலகங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் முதியோர் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்க இதுவரை எந்தவொரு தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லை.
குறிப்பாக, அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற முக்கிய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், முதியோர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது, கைப்பிடி வசதி இல்லாத படிக்கட்டுகள், சிறிய எழுத்துக்களில் உள்ள விண்ணப்பப் படிவங்கள், மாடிக்குச் சென்று சேவை பெற வேண்டிய நிலை உள்ளிட்டவை முதியோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தின. இதற்குத் தீர்வு காணும் வகையில் கேரளத்தில் முதியோர் நட்பு அலுவலக சான்றிதழ் திட்டத்தைச் செயல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தாலுகா அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், போக்குவரத்து சேவை மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பிரிவுகளில் சான்றிதழ் வழங்கப்படும். முதற்கட்டமாக 6 மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அலுவலகம் அமைத்து இந்த முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்த அலுவலகங்கள் ஐந்து பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்படும். அதன்படி, கட்டிட அணுகல்தன்மை (30%) சேவை வழங்கல் (25%) பணியாளர் பயிற்சி மற்றும் நடத்தை (20%) தகவல் தொடர்பு (15%) மற்றும் பங்கேற்பு (10%) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக முதியோர்கள் எந்தவித சிரமமும் இன்றி சான்றிதழ்கள் மற்றும் பிற சேவைகளைப் பெற வேண்டும் என்பது முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
