பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்; ‘தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் அரசின் முடிவு அவசரகதியிலும் தாக்கங்களை அளவிடாமலும் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், கடலோர சூழலமைவு. மீனவர்களின் வாழிட உரிமை மற்றும் எதிர்கால காலநிலை அபாயங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கடற்கரைக்கு அருகில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை எதிர்க்கிறோம் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்து இருப்பதாவது:- 

கடலோர சூழலமைவு, மீனவர்களின் வாழிட உரிமை மற்றும் எதிர்கால காலநிலை அபாயங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு அருகில் அமைக்கும் முடிவைப் பூவுலகின் நண்பர்கள் எதிர்க்கிறோம்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ் நாடு முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் “அடுத்த நூறாண்டுகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் முதலமைச்சரின் அறிவிப்புக்கிணங்க புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 25.55 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

அரசின் இம்முடிவு அவசரகதியிலும் தாக்கங்களை அளவிடாமலும் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக்கிறது. மெரினா கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரையுள்ள மீனவ மக்களிடமிருந்து பல ஆண்டு காலமாக படிப்படியாக அவர்களுக்கு உரிமையான நிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்கிறோம் எனும் பெயரில் மீனவர்களின் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கான பயன்பாட்டில் இருந்த இடம் லூப் சாலையாக மாற்றப்பட்டது. கடற்கரையை அழகுபடுத்துகிறோம், நீலக்கொடி சான்றிதழ் எனும் பெயரிலும் மீனவர்களிடம் கலந்துரையாடாமல் அவர்களது வாழ்வியலுக்குத் துளியும் பயன்பாடாத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே சீனிவாசபுரம் – ஊரூர் ஆல்காட் குப்பம் இணைக்கும் பாலம் அமைக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் அவர்களது இருப்பை மொத்தமாக காலி செய்யும் அபாயத்துடன் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் அங்கு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக மக்களை அப்புறப்படுத்தும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏற்கெனவே நெரிசல் மிகுந்த இடத்தில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டால் வரும் காலத்தில் பாதுகாப்பு, பேரிடர், போக்குவரத்த்கு நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக படிப்படியாக அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் பட்சத்தில் அதனால் நேரடியாக முள்ளிகுப்பம், முள்ளிமாநகர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம். நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், படகுகளை நிறுத்தவும், வலைகளைப் பின்னவும் பயன்படுத்தப்பட்டு கடற்கரை நிலங்களும் பாதிக்கப்படும். அடுத்ததாக சூழலியல் முக்கியத்துவம் அடிப்படையில் பார்த்தாலும் இப்பகுதியில் பெரிய அளவிலான கட்டிடத்தை அமைப்பது தவறானது. திட்டமிடப்பட்டுள்ள 25.55 ஏக்கர் நிலமும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011ந் படி CRZ II எனும் வரையறைக்குள் வருகிறது. CRZ பகுதியில் 20 இலட்சம் சதுர அடியில் கட்டிடம் எழுப்பத் திட்டமிடுவது ஏற்புடையதல்ல.

IPCC எனப்படும் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழு தனது  ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி (Fifth Assessment Report), இந்நூற்றாண்டின் இறுதிக்குள் உலகளாவிய கடல் மட்ட உயர்வு ஒரு மீட்டருக்குக் குறைவாகவோ அல்லது சுமார் ஒரு மீட்டராகவோ இருக்கும் என எச்சரித்துள்ளது. இதன் தாக்கத்தை ஏற்கெனவே சென்னை எதிர்கொண்டுதான் வருகிறது.

சென்னையின் கடற்கரையோரத்தில் கடல் மட்ட உயர்வு (SLR) பற்றிய ஒரு மதிப்பீடு, RCP 2.6 எனும் மிகக் குறைந்த உமிழ்வு வெளியேற்றச் சூழலிலும் கூட 2025ல் 7.1 செ.மீ முதல் 2100ல் 36.87 செ.மீ வரை உயரும் என்றும், அதற்கேற்ப நீருக்குள் மூழ்கும் சாத்தியக்கூறு (inundation potential) அந்தந்த காலகட்டங்களுக்கு 101.2 மீ முதல் 508.4 மீ வரை இருக்கும் என்றும் கணித்துள்ளது.

அதிக உமிழ்வு எனும் RCP 8.5 சூழலில் கடல்மட்ட உயர்வானது 2025ல் 7.38 செ.மீ முதல் 2100ல் 77.88 செ.மீ வரை இருக்கும் என்கிறது. இத்தரவுகளின் அடிப்படையில் 2100ஆம் ஆண்டளவில் கடற்கரையிலிருந்து நிலம் நோக்கிய பகுதியில் ஏறத்தாழ 1.6 கி.மீ. பகுதி நீருக்குள் மூழ்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சென்னை மாநகராட்சி (GCC) பகுதியில் சுமார் 71.6 சதுர கி.மீ. நிலப்பரப்பு 2100ஆம் ஆண்டளவில் கடல் நீர் சூழ்ந்துவிடும், அவற்றில் சில பகுதிகள் நிரந்தரமாகவே மூழ்கிவிடலாம் எனத் தமிழ் நாடு அரசு வெளியிட்ட சென்னை காலநிலை மாற்றத் திட்ட அறிக்கையில் (CHENNAI CLIMATE ACTION PLAN) கூறப்பட்டுள்ளது.

கடற்கரையிலிருந்து 1.6 கி.மீ. தூரம் வரைக்கும் கடலில் மூழ்கும் அபாயமுள்ளதாக அரசின் ஆய்வறிக்கையே கூறும் ஒரு இடத்தில் 500 மீட்டருக்குள் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அறிவியல் மனப்பாங்கு கொண்ட யாரும் எடுக்க மாட்டார்கள். 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ல இடம் வரைக்கும் கடல் அலைகளின் தாக்கம் இருந்ததாக மீனவர்கள் தெரிவிக்கிறனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை வேறொரு பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் அவர்களுக்கான நீண்டகால குடியிருப்புகளை அமைத்துத் தருமாறு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

Source link