புதுடில்லி: இந்திய சுற்றுப்பயணத்தின் போது, சீன அதிபர் ஜின்பிங்கின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள சொகுசு கார், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று, டில்லியில் நடந்து வரும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்றுள்ளார். இன்று மாலை பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேச உள்ளார். ரஷ்ய அதிபர் புடினைப் போலவே, சீன அதிபர் ஜின்பிங்கும், தனது பாதுகாப்புக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய காரை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார்.
சீன அதிபருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட Hongqi N701 என்ற பாதுகாப்பான லிமோசின் காரில் தான் அவர் பயணம் செய்து வருகிறார். எகிப்து, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஹாங் காங் போன்ற நாடுகளுக்கு சென்றிருந்த போதும், சீன அதிபர் ஜின்பிங் இந்தக் காரைத் தான் பயன்படுத்தினார்.
சீனாவின் ‘ரெட் பேனர்’ எனப்படும் இந்த சொகுசு பிராண்ட், இந்தியாவில் ஒரு காலத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் பெற்றிருந்த அதே மதிப்பைக் கொண்டுள்ளது. தோராயமாக 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இதேபோன்ற L5 லிமோசின் மாடல்தான் பிரதமர் மோடியின் 2025 சீனா பயணத்தின் போதும் பயன்படுத்தப்பட்டது.
இந்த N701 கார், 21 இன்ச் புல்லட் ப்ரூப் வீல்கள், புல்லட் ப்ரூப் கண்ணாடி மற்றும் மிகவும் பலமான வெளிப்புற கவச பிளேட்டிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வெடிகுண்டு தாக்குதலை தாங்கக்கூடிய திறனுடனும், ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க காற்று அழுத்த அமைப்புடனும் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கார் உத்தேசமாக 408 ஹெச்பி பவரை உருவாக்கக் கூடிய 6.0 லிட்டர் V12 இன்ஜினைக் கொண்டுள்ளது.
இந்தக் காரில் உள்ள சிறப்பம்சங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காரான கவச லிமோசினான ‘தீ பீஸ்ட்’டுடன் ஒப்பிடப்படுகிறது. அமெரிக்க அதிபரின் காரில், அவசரகால ரத்த சேமிப்பு, செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் அணுசக்தி குறியீட்டு அணுகல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. ஆனால் சீன அதிபர் பயன்படுத்தும் Hongqi N701 காரில், அந்த அளவிலான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
