திண்டுக்கல் சிப்பிப்பாறை பொம்மி நாயின் 17 குட்டிகள்! அரசு கான்ட்ராக்டர் சந்திரசேகர் வீட்டில் விசேஷம்

திண்டுக்கல்: சிப்பிப்பாறை நாய் என்றாலே தமிழகத்தின் பாரம்பரிய நாட்டு நாய்களில் தனி அடையாளம் கொண்டது.. வேகம், சுறுசுறுப்பு, விசுவாசம் என பல சிறப்புகளை கொண்ட இந்த நாயை வளர்ப்பதிலும் பலருக்கு ஆர்வம் உள்ளது.. ஆனால் திண்டுக்கல்லில் வளர்க்கப்பட்ட ஒரு சிப்பிப்பாறை நாய் செய்த காரியம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!

சிப்பிப்பாறை நாய் என்றாலே நம் மண்ணின் பாரம்பரிய நாட்டு நாய் இனம் என்ற பெருமை இருக்கிறது. இந்த நாய்கள் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும்.. உடல் மெலிந்து, நீண்ட கால்களுடன் காணப்படும்.. ஆனால், இந்த நாய்கள் வேகம், சுறுசுறுப்பு, புத்திசாலித்தனமும். அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துவிடும்..

குறிப்பாக முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகளை வேட்டையாடுவதில் இந்த சிப்பிப்பாறை நாய்க்கு ரொம்பவே பிரியமாம்.. அதேசமயம், தங்களது உரிமையாளரிடம் விசுவாசமாகவும், தன்னுடைய எல்லைக்குள் அந்நியர்களை எச்சரிக்கையாக அணுகும் தன்மையும் கொண்டவை. அதனால்தான் சிப்பிப்பாறை நாய் தமிழகத்தின் பாரம்பரிய நாட்டு நாய் இனங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சிப்பிப்பாறை நாய் கடித்தால் விஷத்தன்மை இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். சிப்பிப்பாறை நாய் விஷம் கொண்ட நாய் கிடையாது. அதன் கடியில் பாம்பு போன்ற விஷம் இருப்பதில்லை. ஆனால் அது நாய் என்பதால், கடித்தால் காயம் ஏற்படுவதுடன் ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று அபாயம் இருக்கலாம்.

அதனால் சிப்பிப்பாறை நாய் என்றில்லை.. எந்த நாய் கடித்தாலும் காயத்தை உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரால் நன்றாக கழுவி, மருத்துவமனைக்கு சென்று டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசி எடுத்துக்கொள்வது முக்கியம்.

இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட சிப்பிப்பாறை நாய் ஒன்று இப்போது 17 குட்டிகளை ஈன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள அபிராமி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு அரசு கான்ட்ராக்டர் சந்திரசேகர் என்பவர் கடந்த 5 வருடங்களாக “பொம்மி” என்ற சிப்பிப்பாறை பெண் நாயை வளர்த்து வருகிறார்.

பொதுவாக சிப்பிப்பாறை நாய்கள் ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுவது அரிதானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் பொம்மி நாய் ஒரே நாளில் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் குட்டிகள் பிறக்க தொடங்கிய நிலையில், அடுத்த நாள் காலையிலும் குட்டிகள் பிறந்துள்ளன. மொத்தமாக 17 குட்டிகள் பிறந்துள்ளன.

இந்த நாய்க்கு இதற்கு முன்பும் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் பிறந்துள்ளன. தனது ஒன்றே கால் வயதில் பொம்மி ஒரே நாளில் 10 குட்டிகளை ஈன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதைவிட அதிகமாக 17 குட்டிகளை ஈன்றிருப்பது அந்த பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

17 குட்டிகளும் பிறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன், சந்திரசேகர் வீட்டுக்கு வந்து பொம்மி நாயையும், அதன் குட்டிகளையும் பார்த்து செல்கின்றனர். ஒரே பிரசவத்தில் இவ்வளவு அதிகமான குட்டிகளை சிப்பிப்பாறை நாய் ஈன்றிருப்பது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

அதேசமயம், ஒரே பிரசவத்தில் 17 குட்டிகள் பிறந்தது மரபணு குறைபாடா என்ற சந்தேகமும் எழலாம்.. ஆனால் 17 குட்டிகள் பிறந்தது மட்டும் வைத்து இதை மரபணு குறைபாடு என்று சொல்ல முடியாது.. நாய்களின் இனத்தன்மை, மரபியல், தாயின் வயது மற்றும் கருவுறும் போது உருவாகும் கருக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு பிரசவத்தில் பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை மாறுபடலாம்..

அதனால் இந்த சிப்பிப்பாறை நாய்க்கு 17 குட்டிகள் பிறந்ததை அரிதான நிகழ்வாக பார்க்கலாமே தவிர, இதை வைத்து மட்டும் ஏதாவது மரபணு பிரச்சினை இருப்பதாக முடிவு செய்ய முடியாது.. எப்படியோ, சந்திரசேகரின் வீட்டு பொம்மிதான் இப்போது திண்டுக்கல்லில் ஹாட் டாபிக்காகியுள்ளது..!!