தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு பிரச்னை மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. இதனைக் கண்டித்து திருவள்ளூர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு தேர்வும் நெருங்கி வரும் சூழலில் மின்வெட்டு பிரச்னையால் மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உதயநிதி கேள்வி
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் வோல்டேஜ் பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ‘ப்யூஸ் போன’ த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
