‘கலாச்சாரம் என்பது பெண்ணின் மார்பகம் மட்டும் தானா?’: ஆடை சர்ச்சை குறித்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா லட்சுமி பதில்

கடந்த மே மாதம் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அணிந்திருந்த ஆடை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரது ஆடை பொருத்தமாக இருந்ததா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது அந்தச் சம்பவம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார்.

ரஜினி ஹரிதாஸ் உடனான சமீபத்திய நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, அந்த நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்குக் காரணம் தனது ஆடை அல்ல என்றும், புகைப்படக் கலைஞர்கள் தன்னை புகைப்படம் எடுத்த விதம்தான் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் என்னுடைய முகத்தை மையமாக வைத்து புகைப்படம் எடுக்கவில்லை. மாறாக, வித்தியாசமான கோணங்களில் இருந்து புகைப்படம் எடுத்தனர். அதனால் எனக்கு அசௌகரியமாக இருந்தது. நாம் அசௌகரியமாக உணரும்போது, நமது உடல் மொழியிலும் அது வெளிப்படும். அப்போது எனது தனிப்பட்ட எல்லைகள் மீறப்பட்டதாக உணர்ந்தேன்” என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் தான் அசௌகரியமாக இருந்ததை இணையவாசிகள் கவனித்திருந்தாலும், அதற்கான காரணத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றும், தான் அணிந்திருந்த ஆடையால் அசௌகரியமாக உணரவில்லை என்றும், தன்னை புகைப்படம் எடுத்த விதத்தால்தான் அந்த நிலை ஏற்பட்டதாகவும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் வெளியான விமர்சனங்களையும் தான் பார்த்ததாகக் கூறிய அவர், “அவர் ஏன் இப்படி சங்கடமாக இருக்கிறார்? ஏன் தனது உடையை மறைக்கிறார்? அந்த ஆடை அவருக்கு அசௌகரியமாக இருந்தால், அதை ஏன் அணிய வேண்டும்?” என பலரும் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா லட்சுமி, “கலாசாரம் என்பது ஒரு பெண்ணின் மார்புப் பகுதியிலோ அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடையின் நீளத்திலோ மட்டும் இருக்கிறதா? நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதிலும் கலாசாரம் இருக்கிறது அல்லவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெண்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை என்றும், ஆனால் பெண்கள் தங்களது உடை, உடலமைப்பு மற்றும் ஆடையின் வடிவம் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான ட்ரோல்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை “ட்ரோலிங் தொடங்கிய முதல் 24 மணி நேரம் நான் அதை சிரித்துக்கொண்டே கடந்து சென்றேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இந்த விவகாரம் குறித்து இவ்வளவு பெரிய அளவில் விவாதம் நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறித்தோ, வயதான பெற்றோர்கள் எத்தனை பேர் கைவிடப்படுகிறார்கள் என்பது குறித்தோ ஏன் விவாதிக்க முடியவில்லை? எனது மார்புப் பகுதி குறித்து ஏன் இவ்வளவு தீவிரமான விவாதம் நடத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடை விவகாரத்தில் விமர்சனத்தை எதிர்கொண்ட க்ரித்தி சனோன்

சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனும் இதேபோன்ற விமர்சனத்தை எதிர்கொண்டார். நகை நிறுவனத்திற்காக அவர் நடித்த ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த அவரது ஆடை குறித்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் விளம்பரத்தை நீக்கியது.

விளம்பரம் நீக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு க்ரித்தி சனோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், காலப்போக்கில் பாரம்பரிய ஆடைகள் மாற்றம் கண்டாலும், ஒரு பெண்ணின் கலாசாரத்தை அவரது ஆடையை வைத்து மட்டுமே மதிப்பிடுவது தொடர்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், கலாசாரமும் பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் இருப்பதே தவிர, அவரது ஆடை அல்லது கழுத்துப் பகுதியில் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Source link