சேலம்: சேலம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட புதிய நகரப் பேருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. இப்பேருந்துகள் தவெக கட்சிக் கொடியின் வண்ண அமைப்பைக் கொண்டுள்ளன; இவை விரைவில் சேலம் சாலைகளில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஏற்கனவே அரசின் மினி பேருந்துகள் எல்லாம்தவெக கட்சி கொடி கலரில் தான் பாடி கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்போது டவுன் பஸ்களும் அதேநேரத்தில் மாறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி, தவெக கட்சி கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி, தற்போது தவெக கொடியின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டிருககிறது. செயலியின் முகப்பில் இடது புறத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலது புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்று இருந்தது.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறம் தவெக கொடியின் நிறத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வந்தன. அந்த வகையில் புதிய பேருந்துகள் எல்லாம் மஞ்சள், சிவப்பு கலந்து தவெக கொடியின் நிறத்தில் உள்ளன.
அரசுப் பேருந்துகளுக்கு அரசியல் கட்சியின் கொடி நிறத்தைப் பயன்படுத்துவது சரியல்ல என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேருந்துகளை தவெக கட்சி கொடி நிறத்திற்கு மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டு இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு ஆளுங்கட்சியின் கொடி நிறத்தைப் பூசி, அரசுச் செலவில் விளம்பரம் தேட முயல்வது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதேபோல் பள்ளி பேருந்துகளின் நிறம் தான் மஞ்சள். பள்ளி வேன், பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே மஞ்சள் நிறம் ஒதுக்கப்பட்டது.
இப்போது அரசு பேருந்துகளும் மஞ்சள் சிவப்பு கலந்து மாறும் போது, அந்த பேருந்துகளை அடையாளம் காண்பது மக்களுக்கு கடினமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தால் தான் இதுபற்றி கூடுதல் விவரங்கள் தெரியவரும். அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் இதன் உண்மை தன்மை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
