“ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை.
குறிப்பாக, இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது.
அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது.
எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை.
ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது.
