நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பைனலில் இன்று ஸ்வெரேவ், ஷெல்டன் மோதுகின்றனர்.
நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகத் தரவரிசையில் ‘நம்பர்-2’ ஆக உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 29, 5வது இடத்திலுள்ள ரஷ்யாவின் கச்சானோவை 30, எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார் ஸ்வெரேவ். அடுத்த செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதை ஸ்வெரேவ் 7-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் ‘டை பிரேக்கர்’ வரை சென்று, 7-6 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 59 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ஸ்வெரேவ், 6-3, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
ஷெல்டன் கலக்கல்
மற்றொரு அரையிறுதியில், காலிறுதியில் முன்னணி வீரர் அல்காரசை சாய்த்த, உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டன் 23, சக வீரர் பிரான்செஸ் டியாபோவை 28, சந்தித்தார். முதல் செட்டை பிரான்செஸ் 6-4 என வென்றார். பின் சுதாரித்த ஷெல்டன், அடுத்த இரு செட்டை 6-3, 6-3 என கைப்பற்றினார்.
நான்காவது செட் இழுபறியானது. இருப்பினும் சிறப்பாக செயல்பட்ட ஷெல்டன் 7-5 என வசப்படுத்தினார். 3 மணி நேரம், 18 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ஷெல்டன் 4-6, 6-3, 6-3, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.
இன்று ஸ்வெரேவ்-ஷெல்டன் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
சினியகோவா ஜோடி சாம்பியன்
பெண்கள் இரட்டையர் பைனலில் செக் குடியரசின் சினியகோவா, அமெரிக்காவின் டெய்லர் ஜோடி, அமெரிக்காவின் ஆஷ்லின், ராபின் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 53 நிமிடம் நடந்த போட்டி முடிவில் சினியகோவா ஜோடி 5-7, 6-0, 6-2 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
மாயா ஜோடி ஏமாற்றம்
ஜூனியர் பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் மாயா, உக்ரைனின் சுஷ்கோவா ஜோடி, 6-7, 2-6 என அமெரிக்காவின் கிறிஸ்டினா, அனிகா சகோதரிகள் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
1972க்குப் பின்
யு.எஸ்., ஓபன் டென்னிசில் 1972க்குப் (ஆர்தர் ஆஷ்) பின் பைனலுக்கு முன்னேறிய முதல் அமெரிக்க கறுப்பின வீரர் ஆனார் ஷெல்டன். தவிர, 34 ஆண்டுக்குப் பின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பைனலுக்குள் நுழைந்த அமெரிக்க வீரர் ஆனார். முன்னதாக, 1992ல் மாலிவய் வாஷிங்டன், விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறி இருந்தார்
