டில்லியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் இல்லாத அவலம்: விடுதிகளை முறைப்படுத்த கொள்கை வகுக்கிறது பா.ஜ., அரசு

– சிறப்பு நிருபர் -:

டில்லியில், மாணவர்கள் தங்கும் விடுதிகள், ‘பேயிங் கெஸ்ட்’ எனப்படும் தனியார் தங்குமிடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. சத்யா நிகேதன் பகுதியில், ஐந்து மாடி தங்கும் விடுதி கட்டடம் இடிந்து விழுந்து, 7 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவர்களுக்கான தங்குமிடங்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை டில்லி பா.ஜ., அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் உலக நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கும் சர்வதேச மாநாடுகள், நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கின்றன.

இதற்காக மத்திய – மாநில அரசுகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து, நகரை அழகுபடுத்துகின்றன. ஆனால், நகரில் வசிக்கும் இளம் தலைமுறையினரின் பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகளில், இதே அளவிலான கவனம் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த 6ல், சத்யா நிகேதனில் இருந்த, ‘ஹாஸ்டல் டேஸ்’ எனப்படும் ஐந்து மாடி தங்கும் விடுதி இடிந்து விழுந்தது. 50 ஆண்டுகள் பழமையான கட்டடம் இது.

டில்லி பல்கலை தெற்கு வளாகத்தை சுற்றி இருக்கும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களே அதிகம் இந்த விடுதியில் தங்கியிருந்தனர். டில்லி சுற்றுவட்டாரத்தில் மாணவர்களை பாதிக்கும் இது போன்ற சம்பவம் இது முதன்முறையல்ல.

தீ விபத்து

கடந்த 2024 ஜூலையில், டில்லி பழைய ராஜேந்திர நகரில் உள்ள பயிற்சி மையத்தின் தரைத்தளத்தில் மழைநீர் புகுந்ததில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஜூனில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பயிற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர்.

விசாரணையில், பயோமெட்ரிக் கதவு முறையாக செயல்படவில்லை உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

ஒவ்வொரு சம்பவத்துக்கு பிறகும், இழப்பீடு, கைது, இடைநீக்கம், விசாரணை மற்றும் பாதுகாப்பு விதிகளை கடுமையாக்குவதாக உறுதிமொழிகள் வெளியாகின்றன. ஆனால், அடுத்த சம்பவம் நிகழும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

டில்லியில் உள்ளூர் மக்கள் எண்ணிக்கை மட்டும், 2.3 கோடி பேர். தவிர, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் டில்லிக்கு வருகின்றனர்.

டில்லி பல்கலை, ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா மில்லியா பல்கலை ஆகிய மூன்று மத்திய பல்கலைகள் இங்கு உள்ளன.

இதுதவிர, 11 மாநில பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் தனியார் பல்கலைகளும் செயல்படுகின்றன.

கல்லுாரியில் சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலை விடுதியில் இடம் கிடைப்பதில்லை. பல மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பின், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக டில்லியிலேயே தங்குகின்றனர்.

முன்னுரிமை

டில்லி பல்கலையின், 2024 – 25ம் ஆண்டு அறிக்கையின்படி, அங்கு வழக்கமான கல்வி முறையில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பலர் வெளிமாநிலத்தவர்கள். பல்கலை விடுதிகளில், 9,000 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

டில்லி பல்கலைக்கு உட்பட்ட அரை டஜன் கல்லுாரிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். ஆனால், 1,250 பேருக்கான விடுதி வசதி மட்டுமே உள்ளது.

இதனால், பெரும்பாலான மாணவர்கள் பல்கலை வளாகங்களுக்கு வெளியே தங்க வேண்டிய நிலை உள்ளது. விடுதிகள் போதிய அளவில் இல்லாததால், டில்லியில் தனியார் தங்குமிடங்கள் அதிகரித்துள்ளன. இந்த தங்குமிடங்களில் பெரும்பாலானவை, 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.

இவற்றில் ஒருவருக்கு மாதம், 11 ஆயிரம் – 25 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. சில கல்லுாரி படிப்புகளுக்கான ஆண்டு கட்டணத்தை விட இந்த தொகை அதிகம். இருப்பினும், இந்த தங்குமிடங்களுக்கு போதிய வரன்முறை இல்லை.

சத்யா நிகேதன் கட்டட விபத்தை தொடர்ந்து, மாணவர்களின் தங்குமிட பிரச்னையில் அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங், அனைத்து கல்லுாரி முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தி, மாணவர்களின் தங்குமிடம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, டில்லி முழுதும் தனியார் தங்குமிடங்களை முறைப்படுத்துவதற்கான வரைவு கொள்கையை டில்லி அரசு தயாரித்துள்ளது. இதில் பதிவு, பாதுகாப்பு தரநிலைகள், வாடகை, முன்பணம், வெளியேற்றம் மற்றும் மாணவர்களின் புகார்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.

பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறுகையில், “டில்லியில் செயல்படும் பயிற்சி மையங்கள் மற்றும் தனியார் தங்குமிடங்களை முறைப்படுத்த, விரிவான கொள்கை உருவாக்கப்படும். பேயிங் கெஸ்ட் தங்குமிடங்களில் வசிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார்.

Source link