சென்னை: ‘பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது சட்ட விரோதம் என்று கூற முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக, 14 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேற்கு ஆசிய நாடுகளான பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே, சமீபத்தில் போர் நடந்தது. அப் போது, தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், கூடலுாரில் சட்ட விரோதமாக சிலர் கூடி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து, முகமது என்பவர் உட்பட, 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2025 அக்டோபரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முகமது உள்ளிட்ட, 14 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில், எந்த அடிப்படையும் இல்லாமல் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. காவல் துறை தரப்பில், ‘புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது’ என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘மனுதாரர்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. மற்றவர்களின் உரிமையை பறிக்கவில்லை.
‘பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதை சட்டவிரோதம் என்று கூற முடியாது’ என கூறி, 14 பேர் மீது, கூடலுார் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
