பொய்யாக பேசுகிறார்! சவுக்கு சங்கர் மீது ரூ. 1 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஐபிஎஸ் ஏ. அருண்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். விளம்பரம் தேடுவதற்காகவும், தன் சுயநலனுக்காகவும், ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பதற்காகவும் சவுக்கு சங்கர் தொடர்ந்து தன் மீது பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்பி வருவதாக அந்த மனுவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரியின் மனு மீது பதில் அளிக்குமாறு சவுக்கு சங்கர் மற்றும் எக்ஸ் தள நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரான ஏ. அருண், 1998ஆம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் தனது நீண்ட காலப் பணி காலத்தில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மிகப்பெரிய நற்பெயரையும் மரியாதையையும் பெற்றுள்ளார். ஆனால், சவுக்கு சங்கர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து தன்னை குறிவைத்து அவதூறுகளைப் பரப்பி வருவதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

சவுக்கு சங்கர் தனது கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஆன்லைன் தளங்கள் மூலம் தனது நற்பெயரைக் கெடுக்க முயلவதாக ஐபிஎஸ் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியைப் பற்றி மிகவும் தப்பான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, அந்த மூத்த காவல் அதிகாரியை ஒரு ‘ரௌடி’ என்றும், அரசியல்வாதிகளுக்கு வேலை செய்யும் ‘கூலி’ என்றும், குற்றவியல் சட்டங்களை தனது சுயலாபத்திற்காகத் திருப்புபவர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். பல வீடியோக்களில் அதிகாரியின் பெயரைப் பயன்படுத்தியும், சில இடங்களில் அவரை ‘ஐஸ்கிரீம் அதிகாரி’ அல்லது வெறும் ‘ஐஸ்கிரீம்’ என்றும் கேலியாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று மனுவில் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 15ஆம் தேதி சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண் மற்றும் அவரது மனைவியும் இந்திய வருவாய்ப் பணி அதிகாரியுமான பி. யமுனா தேவி ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாகவும், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அவர் பதிவிட்டார். மத்திய அரசு வட்டாரங்களிலிருந்து இந்தத் தகவல் கிடைத்ததாகக் கூறி, அவர்களின் புகைப்படங்களையும் அந்தப் பதிவில் இணைத்திருந்தார்.

ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பதிவு எடிட் செய்யப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததாக மற்றொரு பொய்யான தகவலை அவர் பதிவிட்டார். மத்திய அரசின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான இந்தத் தகவல்கள் முற்றிலும் திட்டமிடப்பட்ட கற்பனைகள் என்றும், இதன் மூலம் உண்மை போல மக்களை நம்ப வைக்க சவுக்கு சங்கர் முயன்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் தன்னிடம் ஏதோ ரகசிய மற்றும் உண்மையான தகவல்கள் இருப்பதாக ஒரு போலித் தோற்றத்தை சவுக்கு சங்கர் ஏற்படுத்தி வருகிறார். அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பல முக்கிய நபர்களைப் பற்றிப் பொய்யான செய்திகளை உண்மைகளைப் போல ஜோடித்து வெளியிட்டு, அதன் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைப் பெறுவதும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே அவரது நோக்கம் என்று ஐபிஎஸ் அதிகாரி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரங்களால் தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பத்தினர் மற்றும் தொழில் ரீதியான நற்பெயருக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் வாதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன் ஆஜரானார். மறுபுறம், சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் கே. கௌதம் குமாரும், எக்ஸ் (X) நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் அருண் சி. மோகனும் ஆஜராகினர்.

சமூக வலைதளங்களில் இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அவதூறு வீடியோக்கள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மற்றும் பிற எதிர்மனுதாரர்கள் செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் தங்களது பதிலைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.