ஏதாவது பண்ணி ஜெயிச்சிடுங்க! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. விஜய் களமிறக்கிய பெரிய டீம்!

சென்னை: தமிழகத்தில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிலிருந்து விலகி இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்வதற்காகப் பலத்த ஏற்பாடுகளைக் கட்சித் தலைமை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் திட்டமிட்டுக் கண்காணிக்க ஒரு பிரம்மாண்டமான தேர்தல் பணிக்குழுவையும், பொறுப்பாளர்களையும் நியமித்து முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வருகிற அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல், ஆளுங்கட்சியான தவெகவுக்கு மிக முக்கியமான மற்றும் அரசியல் ரீதியாகக் கௌரவமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் கட்சியின் பலத்தை மேலும் பலப்படுத்தவும், இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றவும் முதலமைச்சர் விஜய் இந்தத் தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார். இதற்காகக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பலத்த தேர்தல் படையைக் களமிறக்கியுள்ளார்.

இதன்படி, இரண்டு தொகுதிகளின் ஒட்டுமொத்த தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைத்துக் கண்காணிக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட சிறப்புப் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு கள நிலவரங்களைக் கவனித்து வருகின்றனர்.

தனித்தனியாக ஒவ்வொரு தொகுதிக்கும் பலத்த தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குப் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக அமைச்சர்கள் ராஜ்குமார், வினோத் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.எல்.ஏ-க்களான சரவணமூர்த்தி, தியாகராஜன், விஜயராஜ், காமராஜ் மற்றும் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாலாஜி ஆகியோர் துணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு மக்களைச் சந்திக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர்.

இதேபோல், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குப் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து பணியாற்ற அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ் செல்வன் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.எல்.ஏ-க்களான பாலமுருகன், தாராபுரம் தொகுதி வேட்பாளரான சத்யபாமா, ராம்குமார், திலீப் மற்றும் சத்யா ஆகியோர் துணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் பலத்த போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெக தரப்பில் அமைச்சர்களே நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை பார்ப்பது தேர்தல் களத்தை மேலும் சூடுபடிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

விஜயின் நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வலிமையான தேர்தல் பணிக்குழு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் இந்த இரண்டு தொகுதிகளின் மீதும் திரும்பியுள்ளது.