“எவனாக இருந்தாலும் விடமாட்டோம்” – முதல்வர் விஜய்யை சீண்டிய மேயர் பிரியா!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

குறிப்பாக திமுக தலவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது,  மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று (12-09-26) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதில் மேயர் பிரியா பேசியதாவது, “மாண்பும் மரபும் என்னவென்றே தெரியாமல் மாண்புமிகு என்று சொல்லக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே.. அமைச்சர்கள் என்றாலே ஒரு நாகரிகமும் மரியாதையும் அதிகமாக கொடுக்கக்கூடிய ஒரு இடம்.  ஆனால் இன்றைக்கு டவுசர் அமைச்சர், முருக்கு அமைச்சர், பவுடர் அமைச்சர், எது கேட்டாலும் ஆதாரத்துடன் தான் பேசுகிறேன் என்று சட்டசபையில் கத்துகிற ஒரு அமைச்சர் இவர்கள் எல்லாம் தான் உங்களுக்கு கீழே இருக்கிறார்கள். அமைச்சர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் அ,ஆ,இ,ஈ என எழுத்து கூட்டி படித்து பேசுகிறார்கள்.

உங்களுடைய அமைப்பை இந்த லட்சணத்தில் வைத்துக் கொண்டு நீங்க எல்லாம் திமுககாரர்களை பார்த்து கேள்வி கேட்கலாமா? அந்த தகுதி உங்களுக்கு இருக்கிறதா? சட்டசபஒயில் என்ன பேச வேண்டும்? என்ன பேசக்கூடாது? என எதுவுமே நீங்கள் சொல்லித் தரவில்லை. யாரை சீண்டி பார்க்கிறீர்கள்? எந்த மாதிரி ஒரு கழகத்தை சீண்டி பார்த்திருக்கிறீர்கள் எனத் தெரியாமல் சீண்டி இருக்கிறீர்கள். நாங்கள் தானாக பிரச்சனைக்கு போக மாட்டோம், ஆனால் வருகிற பிரச்சனையை என்றைக்குமே விடமாட்டோம், நீங்களே விட்டாலும் நாங்கள் அதை விட மாட்டோம். முதல்வர் இன்னும் திரைப்படத்தில் 3 மணி நேரம் நடித்துவிட்டு போகிறோம் என்ற மாதிரி சட்டசபையில் பேசிட்டு உடனே போகிறார். மிசா சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?  

நீங்கள் முதுகை காண்பித்து ஓடு ஓடு ஓடு என்று ஓடிட்டு உதயநிதி ஸ்டாலினை பார்த்து போகக்கூடாது என்று சொல்லிட்டு நீங்கள் ஓடுறீங்க… இப்படி ஒரு ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக இதற்கான தீர்ப்பு விரைவில் அனைவருமே பார்ப்பீர்கள். என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வார்கள். அதுபோல் என் தலைவனை தொட்டவன் எவனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார். 

Source link