தேடப்படும் கள்ளச்சாராய முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: அதிகாலையில் ம.பி. போலீசார் நடவடிக்கை

சாகர்:மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்ட போலீஸ், பஹ்ரோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதுவா நாலா பகுதிக்கு அருகே இன்று(செப்., 13) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, தேடப்பட்டு வந்த குற்றவாளியான சிவாஞ்சய் ராஜ்புத்தை கைது செய்துள்ளது.

ரூ.30,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சிவாஞ்சய் ராஜ்புத், சாகர் மாவட்டத்தில் 16-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த பண்டா கள்ளச்சாராய விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளி ஆவார்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த சிவாஞ்சய் ராஜ்புத்தை, இன்று அதிகாலை போலீஸ் குழுவினர் சுற்றிவளைத்து மறித்த போது, ராஜ்புத் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

அவனிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், மூன்று வெற்று தோட்டாக்கள், ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில்,இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான கர்னி சேனாவின் பிரிவுத் தலைவர் சந்திரபான் சிங்கின் உறவினரான சிவாஞ்சய் ராஜ்புத், பல்வேறு கிராமங்களில் ‘சாகர் கோல்ட்’ என்ற பெயரில் மெத்தில் ஆல்கஹால் கலந்த விஷச் சாராயத்தைத் தயாரித்து விநியோகிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளான்.

இந்த நெட்வொர்க்கின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் ரவி லகேரா, மத்தியப் பிரதேசம் – உத்தரப் பிரதேச எல்லைக்காட்டுப் பகுதியில் இதேபோன்ற ஒரு என்கவுண்டரில் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அடுத்த கைது நடவடிக்கை நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Source link